பகவத் கீதையின்படியே CAA துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது: இல. கணேசன்

Published On:

| By Balaji

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் நடக்கும் போராட்டங்களில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 22) பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன், துப்பாக்கிச் சூட்டை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

உபி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொல்லப்படுவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இல. கணேசன், “அவர்கள் சுட்டுக் கொல்லப்படாவிட்டால் அவர்களால் எத்தனை பொதுச் சொத்துகள் நாசமாகும், எத்தனை மக்கள் காலியாவார்கள் என்பதை அந்த இடத்திலிருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதும் நீங்கள் எல்லாரும் (ஊடகத்தினர்) கொன்றுவிட்டாய், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டாய் என்றெல்லாம் சொல்வீர்கள்.

மிகக் குறைந்த சேதம் ஏற்படும், அதிக சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று வருமானால் ஆயுதத்தைப் பிரயோகிக்கத்தான் தேவைப்படும். அப்படி ஆயுதத்தைப் பிரயோகிக்க வேண்டிய தகுதி இருப்பவர்கள், உரிமை இருப்பவர்கள் இருப்பவர்கள் அதை சட்ட ரீதியாக செய்தால் அதில் ஒன்றும் தவறில்லை. இப்போது நான் சொன்னதுதான் பகவத் கீதையின் சாராம்சம்” என்ற இல. கணேசன் தொடர்ந்து,

“இப்போது கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இல்லை. இது இந்திராகாந்தியின் எமர்ஜென்சி இல்லை. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்திலே விவாதிக்கப்பட்டு அதன் பின் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் பிறகு வன்முறையில் இறங்குவது என்பது எந்த வகையில் நியாயம்? ஜனநாயகத்தில் கதவடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவற்றின் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க இடம் இருக்கிறது. வன்முறையில் ஈடுபட எவனுக்கும் உரிமையில்லை” என்று கூறியிருக்கிறார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share