முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று போட்டித் தேர்வு எழுத செல்வோர்கள் தங்களது சொந்த அல்லது வாடகை வாகனத்தில் பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் எவரெஸ்ட் சிகரம்போன்று உயர்ந்து வருகிறது என்று அமைச்சர் கூறுகிறார். அதற்கேற்றாற்போல் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதனால் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமையன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
முழு ஊரடங்கு நாளில் சென்னையில் புறநகர் ரயில் சேவை மட்டுமே உள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அதில் பயணம் செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் போட்டித் தேர்வுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் தேர்வர்கள், தேர்வு மையத்துக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜனவரி 9ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பல்வேறு நிறுவனங்கள் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் நடத்துகின்றன. இதுகுறித்து அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையன்று போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு செல்வோர்கள் தங்களிடம் உள்ள ஹால்டிக்கெட் மற்றும் அழைப்புக் கடிதத்தை போலீசாரிடம் காண்பித்துவிட்டு, தங்களது சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
தேர்வுக்கு செல்பவர்களின் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு, அவர்கள் பயணம் மேற்கொள்ள போலீசார் அனுமதிக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,