எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்தார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திடம் பூங்கொத்து அளித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக அவைத் தலைவர் மதுசூதனன் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்துசேர்ந்தார் மதுசூதனன்.
பின்னர் பேசிய பன்னீர்செல்வம், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன். எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது” எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி வெளியே வந்த நிலையில் அவருக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி உருவ ஓவியத்தை வரைந்திருந்த சிலர், நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவ்வாறான கொண்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
**எழில்**�,