சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் மாமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
நடப்பு நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வு குறித்துப் பேச அனுமதி கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நேரம் ஒதுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனுமதி கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் மாமன்றத்திலிருந்து அவர்கள் வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் நமஸ்காரம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது வணக்கம் என்று அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் சத்தமாகக் கூறினர்.
இதற்கு உமா ஆனந்தன் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளில் கலந்து பேசுவேன் மன்னித்து விடுங்கள் என்று கூறினார். இதற்கு இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியாதுங்க என்று பதிலளித்தார். இந்த நிகழ்வு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய உமா ஆனந்தன் கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் அவசியம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பதிலுக்கு திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து ரிப்பன் மாளிகைக்கு வெளியே பேட்டியளித்த உமா ஆனந்தன் எனக்கு இந்தி தெரியும் என்று கூறினார். ‘மேரா ஹிந்தி மாலும்’ என்று கூறிய அவர், பிரச்சினை வேண்டாம் என்றுதான் மாமன்றத்தில் இந்தி தெரியாது என்று கூறினேன் என்று பதிலளித்தார்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருதவேண்டும் உள்ளூர் மொழிகளை அல்ல என்று கூறியிருந்தார். இதற்குத் தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் சென்னை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஒரே ஒரு பாஜக கவுன்சிலர், இந்தி தெரியாது மற்றும் தெரியும் என்று இரு வகையிலும் கூறியிருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது
**-பிரியா**