`தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த ட்ரம்ப்

Published On:

| By Balaji

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார்.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று (பிப்ரவரி 24) காலை இந்தியா வந்த ட்ரம்ப் அகமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆக்ரா சென்றார். ட்ரம்ப், மெலனியா ஆகியோரை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். ட்ரம்பை வரவேற்க பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறிது நேரம் நின்று கலை நிகழ்ச்சிகளை பார்த்த ட்ரம்ப், கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

சரியாக 5.00 மணிக்கு தாஜ்மகாலுக்கு சென்ற ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சுற்றிப் பார்த்தார். தாஜ்மகால் முன்பு இருவரும் ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதிகாரி ஒருவர் தாஜ்மகாலின் வரலாறு பற்றியும், ஒவ்வொரு இடத்திற்குமான சிறப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினார். இதேபோல இவாங்கா ட்ரம்ப், ஜாரேட் குஷனர் ஆகியோரும் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.

தாஜ்மகால் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட ட்ரம்ப், “தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் உயர்ந்த மற்றும் மாறுபட்ட அழகுக்கு காலத்தால் அழியாத சான்றாக உள்ளது. நன்றி இந்தியா” என்று எழுதியுள்ளார்.

**த.எழிலரசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share