zகிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துக: ராமதாஸ்

Published On:

| By Balaji

கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக இன்று (ஜூலை 22) பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ஒன்றிய  அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அந்த உரிமை அவ்வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை.

27% இட ஒதுக்கீட்டு வழக்கில் 16.11.1992 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் எனப்படும் வசதி படைத்தவர்களை அடையாளம் கண்டு விலக்கி, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயம், சம்பளம் தவிர பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த வருமான வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆனால், கடந்த 2013ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமான வரம்பு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பிறகும் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்த கோரிக்கை பரிசீலனையில்தான் இருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது நியாயமல்ல. இதுகுறித்த முடிவை எடுப்பது ஒன்றும் சிக்கலானது அல்ல.

கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்தும் விவகாரத்தில், பி.பி.சர்மா குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கிரீமிலேயரை தீர்மானிப்பதற்கான கணக்கில் சேர்க்கக்கூடாது என்று ஏற்கனவே வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததை வைத்துப் பார்க்கும்போது, கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கான வருமானத்தில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாயையும் சேர்ப்பதற்காகத்தான் ஒன்றியஅரசு திட்டமிட்டு தாமதப்படுத்துகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற தத்துவம் இந்திய அரசியல் நிர்ணய அவையால் படைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திலோ, அதன்பின் அதில் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட திருத்தங்களிலோ இடம்பெறவில்லை.

மாறாக, சமூக நீதிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சில நீதிபதிகளால் திணிக்கப்பட்டதுதான் இந்தத் தத்துவம் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்தத் தத்துவம் இன்னும் நீடிக்கிறது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியுடைய பலர் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிரீமிலேயர் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. அதற்கு முன்பாக கிரீமிலேயர் வருமான வரம்பு உடனே உயர்த்தப்படாவிட்டால், இப்போது இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பலரும் அந்த உரிமையை இழப்பார்கள்.

எனவே, கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, கிரீமிலேயர் வருமான வரம்பைக் கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாய் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share