nமுதல்வருக்கு கொரோனா பாதிப்பா? தமிழக அரசு

Published On:

| By Balaji

முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல முன்னாள் அமைச்சர் வளர்மதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, அர்ஜுனன், சதன் பிரபாகர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஜூலை 7 ஆம் தேதி முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கமணிக்கு 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் உள்பட ஒட்டுமொத்த அலுவலகத்துக்கே [கொரோனா பரிசோதனை](https://minnambalam.com/public/2020/07/11/15/cm-edapadi-palaniswamy-and-his-office-corona-test) செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் நேற்று மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (ஜூலை 14) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share