போராட்டங்கள் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என பல தரப்பினரும் வெகுண்டெழுந்து போராடிவருகின்றன. சட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்ட மத்திய அரசு, துப்பாக்கிச் சூடு, தடியடி என போராட்டங்களை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. இப்போது, நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று கருத்து தெரிவித்தார். போராட்டங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் போராட்டங்களை வன்முறை என கொச்சைப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த் என அவருக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ரஜினிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுபோலவே விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “அரச பயங்கரவாதத்தின் ஆதரவாளர்தான் ரஜினிகாந்த் என்பதை நான் ‘ ரஜினியின் காட்சி அரசியல்’ என்ற கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த கணிப்பை அவர் ஸ்டெர்லைட் பிரச்சனையிலும் இப்போதும் உறுதிப்படுத்தியிருக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள்,உரிமைகள்,உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும்,மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல!அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோலவே பலரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
�,