iபெரியாருக்காக பாஜகவை எதிர்த்த ராமதாஸ்

Published On:

| By Balaji

ட்விட்டரில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட தமிழக பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அப்பதிவு நீக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அணுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை சிம்சனிலுள்ள பெரியார் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாயகத்திலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திலும், விசிக தலைவர் திருமாவளவன் சிம்சனிலுள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோலவே பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பெரியார் நினைவுநாளை அணுசரித்துவருகின்றன. ட்விட்டரில் #Periyar என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறான பதிவொன்றை தமிழ்நாடு மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பாஜகவுக்கு எதிராக கண்டனங்களும் குவிந்தன.

பெரியார் குறித்து அவமரியாதையாக பதிவிடப்பட்டிருக்கும் அந்த பதிவினை நீக்கி விட்டு பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், சமூக சீர்திருத்தவாதி பெரியாரை கொச்சைப் படுத்தியது தவறு என்றும் இது கண்டத்திற்குரிய செயல் என்றும் தெரிவித்தார். பெரியார் பற்றி தவறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழ்நாடு ஒன்றுபட்டு இருப்பதற்கு வித்திட்ட பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரை மறக்க முடியாது. இவர்களை யார் இழிவுபடுத்தினாலும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு என்றுமே திராவிட பூமி” என்று கருத்து தெரிவித்தார். எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கவே பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து பெரியார் குறித்த பதிவு நீக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் நிர்மல்குமார், “கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்தில் எங்களுக்கு உடன்பாடுதான்” என்று தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழ்நாடு பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும். மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார். அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியாரைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதை எதிர்த்து, கோவையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share