அதிமுகவில் ஜெயித்துவிட்டு வேறு கட்சிக்கு மாறினால் வீடுபுகுந்து வெட்டுவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் கடந்த 28ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, “அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்துவிட்டு எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கட்சியினரை மிரட்டும் வகையில் பேசிய இவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சாத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தன்னை தேடுவதை தெரிந்துக் கொண்ட அதிமுக நிர்வாகி தலைமறைவானார்.
இந்த நிலையில் சண்முகக்கனி சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்ய முயன்றபோது, வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளார். அதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தற்போது சண்முகக்கனி கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
**-வினிதா**