xவழக்கு போட்ட முதல்வருக்கு நன்றி சொன்ன ஆ.ராசா

politics

தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். இதற்கு பதிலளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இதுதொடர்பாக தன்னுடன் விவாதிக்கத் தயாரா என கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக சமீபத்தில் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, ஜெயலலிதாவை சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்றும், முதல்வர் பழனிசாமியையும் விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது 153-கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,505/1( b)- தவறான தகவல், மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதுபற்றி ஆ.ராசா இன்று (டிசம்பர் 13) வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்தக் கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதல்வர், தமிழக காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என் மீது தொடுத்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டனக் கருத்துகளை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதல்வருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட ஆ.ராசா,

“இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களைத் தடுக்கலாம் என்றோ, முதல்வர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது” என்றும் சாடினார்.

மேலும், “என் மீது போடப்படும் வழக்கைப் பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவைப் பின்தொடர்ந்து அவரைப் போலவே ஊழலில் திளைக்கும் முதல்வரையும், இந்த அரசையும் தோலுரித்துக் காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்றும் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *