Q3 தொகுதி இடைத் தேர்தல் எப்போது?

Published On:

| By Balaji

3 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 10 ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார். இதுபோலவே, பிப்ரவரி 27 ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி. பி. சாமி, பிப்ரவரி 28 ஆம் தேதி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இதனால் மூன்று தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவி இழந்தாலோ அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். எனினும், கொரோனா பரவல் காரணமாக 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு, “தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய விதிப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. எனினும், இடைத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என்றும் அவர் கூறினார்.

**எழில்**

[மூன்று தொகுதி இடைத்தேர்தல்: சட்டம் என்ன சொல்கிறது?](https://minnambalam.com/politics/2020/06/15/72/tamilnadu-three-assembly-constituencies-vacancy-by-election-legal-opinion)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share