சாதகமான நடவடிக்கை எடுக்கிறேன்: அன்புமணியிடம் கூறிய முதல்வர்!

politics

10.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 8) சந்தித்துப் பேசினார்.

10.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் பாமக கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம் கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வலியுறுத்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் எழுவர் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ சட்ட வல்லுநர்களை ஆலோசித்து இந்த 10.5 இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாக வெல்லும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் சட்டம் இயற்ற அன்புமணி முதல்வரிடம் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைய சந்திப்பு நல்ல சந்திப்பாக அமைந்தது. 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் சட்டம் இயற்ற வலியுறுத்தினோம். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கலாம். எந்த தடையும் இல்லை. ஆனால் புள்ளி விவரங்களை வைத்து நியாயப்படுத்த வேண்டும் என்று தெளிவாகத் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்விவகாரத்தில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. ஒரு சமுதாயத்துக்குத் தனிப்பட்ட முறையில் இட ஒதுக்கீடு கொடுக்கலாம், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம். ஜனாதிபதியிடம் செல்ல வேண்டியதில்லை என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை முதல்வரிடம் கூறியுள்ளோம்.

எனவே 10.5% இட ஒதுக்கீட்டைக் கூடுதல் புள்ளிவிவரங்களுடன் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். நிச்சயமாகச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் கூறினார்.

இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றினால் எங்களுக்கு மகிழ்ச்சி. அரசாங்கம் நினைத்தால் புள்ளி விவரங்களைச் சேகரிக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்” என்றார்.

அப்போது அவரிடம் இவ்வழக்கில் முறையாக வாதாடவில்லை என அதிமுக குற்றம்சாட்டுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இந்த விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அபிசேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, ராகேஷ் திவேதி என நல்ல மூத்த வழக்கறிஞர்கள் வைத்து வாதாடினார்கள். நல்ல விதமாகத்தான் அரசு செயல்பட்டது.

இன்றைய சந்திப்பின் போது நாங்கள் எந்த புள்ளி விவரத்தையும் கொடுக்கவில்லை. கடிதம் ஒன்று கொடுத்திருக்கிறோம். இது சாதி பிரச்சினை அல்ல. ஒரு சமூக நீதி பிரச்சினை. தாழ்த்தப்பட்ட மக்களும், வன்னியர்களும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சட்டநாதன் ஆணையம் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வன்னியர்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் ஒரு பெரிய சமுதாயம் மிக மிக பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். அந்த வகையில் இது ஒரு சமூக நீதி பிரச்சினை என்று முதல்வரும் நேற்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். பின் தங்கியிருக்கக் கூடிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும். இது அரசின் கடமை. இன்றைய சந்திப்பு பாசிட்டிவாக இருந்தது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு சட்டம் இயற்றியது. அதை திமுக அரசு உறுதி செய்தது. சட்டச் சிக்கல்கள் ஏற்பட்ட போது கூட நல்லவிதமாகத்தான் கையாண்டார்கள். எனவே இதை அரசியல் கண்ணோட்டத்தோடு நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *