zதிமுகவிடம் பரிசு… அதிமுகவுக்கு ஓட்டு: ஈபிஎஸ்

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 14) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக பரிசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் வாக்கை மட்டும் அதிமுகவுக்குச் செலுத்துங்கள் என்று கூறினார்.

கோவையை பொறுத்தவரை அந்த மாவட்டத்துக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டுகிறது. அதுபோன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பரிசு விநியோகித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டுகிறது அதிமுக.

இந்நிலையில் கோவை, 90ஆவது வார்டான கோவைப்புதூர் பெருமாள் கோயில் வீதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்வதாகத் தகவல்கள் பரவியது.

இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நேற்றிரவு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அங்கு வந்த திமுகவினரின் காரை பிடித்து வைத்துக்கொண்டு பறக்கும்படை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலைத் தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணிக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அப்போது அதிமுகவினர் திமுகவினரின் காரை சோதனையிடக் கூறிய நிலையில், அதனை போலீசார் விடுவித்து அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து ராமநாதபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இந்தச்சூழலில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், திமுகவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்தும் ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், ஜெயராம் மற்றும் கோவை அதிமுக வேட்பாளர்கள் ஆகியோர் ராமநாதபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதுகுறித்து தகவல் அறிந்து காவல்நிலையத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுபோன்று கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமாரைச் சந்தித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது.

இந்தசூழலில், கோவை கொடிசியா மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”70 லாரிகளில் ஹாட்பாக்ஸ் வந்து இறங்கியிருக்கிறது. இது கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு கொடுப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்திருக்கிறார். இதைக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். இது எல்லாம் கொள்ளை அடித்த பணம் தான். எனவே பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வாக்கை மட்டும் அதிமுகவுக்குப் போடுங்கள்” என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம், ஹாட்பாக்ஸ் வந்த செய்தி தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்தவரை வேனில் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார் கோவை துணை ஆணையர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்றால் திமுக அரசில் காவல்துறை எவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றும் கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *