நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று பெரும்பாலான கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக சேலம் மாவட்டம் பெரியசோரகையில் உள்ள சென்றாயப்பெருமாள் திருக்கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி, இன்று(பிப்ரவரி 6) எடப்பாடி பழனிசாமி சென்றாயப்பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். தமிழக முதல்வர் சைக்கிள் பயணம், நடைப்பயிற்சி, தேநீர்க்கடையில் டீ குடிக்கும் காட்சிகளைத் தான் பார்க்க முடிகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் காட்சிகளை பார்க்கமுடியவில்லை. இதற்குதான் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தார்களா?. நகை கடன் ரத்து செய்யப்படும் என்று கூறியதை நம்பி 48 லட்சம் பேர் நகைகளை கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைத்தனர். அதில் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி ஆக வேண்டும். திமுகவுக்கு ஓட்டு போட்டதற்கு அவர்களுக்கு கிடைத்த பரிசு வட்டி கட்டுவதுதான்” என்று கூறினார்.
7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், “ஏழை மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக, நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெறமுடியவில்லை. அதனால், அவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைப்பது அரிதாக இருந்தது. நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். அதனால் கிராமப் பகுதி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறுவதற்காக, நான் முதல்வராக இருந்தபோது 7.5% இடஒதுக்கீடு கொண்டுவந்து, சட்டமாக்கப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த 7.5% இடஒதுக்கீட்டை எதிர்கட்சிகளோ அல்லது மக்களோ கோரிக்கை வைத்து கொண்டுவரப்பட்டதல்ல. என்னுடைய மனதுக்கு தோன்றியது. இதன்மூலம் 574 பேர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அவர்கள் படிப்பை தொடர்வதற்கு நிதி தேவை,. அதை உணர்ந்து 7.5% சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று உத்தரவுப்போட்டேன். இன்றைக்கு அது நன்றாக பலன் கொடுக்கிறது.
தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே. ஏன் செய்யவில்லை. பேசுறது அனைத்தும் பொய், பித்தலாட்டம். தேர்தலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெற்றி பெற்ற பின்பு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. கடந்த எட்டு மாதங்களாக மக்களுக்கு நன்மை தரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அதிமுகவின் திட்டங்களைதான் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வருகிறார். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் , உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றது திமுக. திமுக என்றால் தில்லுமுல்லு என்பதை மக்களிடம் உணர்த்த வேண்டும். அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்” என்று கூறினார்.
**-வினிதா**