கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது, இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று கோகுல்ராஜ் தாயார் உருக்கமாகப் பேசினார்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
அதன்படி, முதல் குற்றவாளியான யுவராஜுக்கு (ஏ1) மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அருண்(ஏ2) , குமார்(ஏ3) ஆகியோருக்கு மூன்று ஆயுள் சிறைத் தண்டனை. சதீஸ்குமார்(ஏ8), ரகு(ஏ9), ரஞ்சித்(ஏ10), செல்வராஜ்(ஏ11), சந்திரசேகரன்(ஏ12) ஆகியோருக்கு 2 ஆயுள் சிறைத் தண்டனை. பிரபு(ஏ13), கிரிதர்(ஏ14) ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆண்டுகள் கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
முதல் குற்றவாளி யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு, கருணை மனு கூட போடமுடியாதவாறு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, “இந்த வழக்கில் போராடிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கேட்டோம். ஆனால் தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்றாலும், இது கொடூரமான தண்டனைதான். என் மகனை கொடூரமாகக் கொலை செய்தது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும். இனி எந்தவொரு தாயுக்கும், மகனுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. ஒவ்வொரு இரவும் செத்துப் பிழைத்தேன். என் கணவர், மகன் புகைப்படத்துக்கு விளக்கேற்றும் போதெல்லாம் அழுதிருக்கிறேன்.
வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கும், விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி. 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விட்டுவிடக் கூடாது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தர வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
**-பிரியா**