kலதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் அஞ்சலி!

Published On:

| By admin

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று(பிப்ரவரி 6) காலை காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் மதியம் 3.30 வரை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரின் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து மும்பை பிரபுகஞ்சில் இருந்து சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

விமானம் மூலம் மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடி மறைந்த பாடகியின் இறுதி சடங்கில் பங்கேற்று, அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் சகோதரியும் பாடகியுமான ஆஷா போஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, கோவா முதல்வர் ஆகியோர் லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதுபோன்று, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பூங்காவில் லதா மங்கேஷ்கரின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

லதா மங்கேஷ்கருக்கு கவுரவும் அளிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள சிக்னல்கள், அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share