பெட்ரோல் டீசல் விலை: மோடிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு!

Published On:

| By admin

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளியுங்கள் என்று பிரதமர் மோடி மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 27) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் இறுதியில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறித்து பிரதமர் பேசினார்.

அப்போது அவர், உக்ரைன் – ரஷ்யா பிரச்சினையைச் சுட்டிக்காட்டி, உலகளாவிய நெருக்கடி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற ஒரு நிலையில் கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வினை மேலும் வலுப்படுத்துவது கட்டாயமாக இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்களும் கலால் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
ஆனால், சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும் சில மாநிலங்கள் இதைச் செய்யவில்லை. இதனால் மக்களுக்கு எந்த பலனும் சென்று சேரவில்லை. இது ஒரு வகையில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்” என்றார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையைப் பின்பற்றாததால் இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பது அந்த மாநில மக்களுக்கு ஏற்படும் அநீதி மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் உதாரணமாகக் கூறி, கலால் வரியைக் குறைத்ததன் மூலம் கர்நாடகாவுக்கு 5000 கோடி ரூபாயும் குஜராத்துக்கு 3,500 முதல் 4000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இப்போது வாட் வரியைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இந்த மாநிலங்கள் நவம்பரில் செய்ய வேண்டியதை இப்போது செய்ய வேண்டும். வாட் வரியைக் குறைப்பதன் மூலம் பொது மக்கள் எதிர்கொள்ளும் சுமையை நீங்கள் குறைக்கலாம். நான் யாரையும் விமர்சிக்கவில்லை. ஆனால், உங்கள் மாநில மக்களின் நலனுக்காக இதைக் கேட்கிறேன் என்றார்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகான ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை பற்றி மோடி ஏன் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மாநிலத்திற்கு ரூ.97,000 கோடி பாக்கி வைத்துள்ளது. அதில், பாதி தொகையை மாநிலத்திற்கு வழங்கினால் கூட, பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க முடியும். ஏற்கனவே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியை ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளது . இதனால் அரசின் கருவூலத்துக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வசூல் மூலம், மோடி அரசு ரூ.17,31,242 கோடியை திரட்டியுள்ளது. மத்திய வரிகள் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் 25% மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு ரூ.26,500 கோடி பாக்கி வைத்துள்ளது. தேசிய அளவில் நேரடி வரி வசூலில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு 38.3 சதவிகிதமாகும். ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு 15 சதவிகிதமாகும். ஆனால் மத்திய அரசு மராட்டிய மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.

அதுபோன்று மும்பையில் ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய அரசு வாட் வரியாக ரூ.24.38ம், மாநில அரசு ரூ.22.37ம் பெறுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு 31.58ம், மராட்டிய அரசு ரூ.32.55ம்பெறுகிறது. இதன்மூலம் மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று பிரதமரின் கருத்துக்கு கேரள நிதியமைச்சர் பாலகோபாலும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share