தமிழகத்தின் உரிமைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
15 ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 1928.56 கோடி என்ற குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட, இது 2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் குற்றம்சாட்டிவிட்டு, அதற்கு நேர் எதிராக பன்னீர்செல்வம் பேசுகிறார் என குற்றம்சாட்டி நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (ஏப்ரல் 26) அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், 15-வது நிதிக்குழுவிடம் இருந்து தமிழ்நாடு என்ன பெற்றுள்ளது என்பதை குறித்து கொரனோ தடுப்பு பணியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஸ்டாலின் ஒரு தேவையில்லாத சர்ச்சையை கிளறி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ள பன்னீர்செல்வம்,
“நான் நிதிநிலை அறிக்கையில் கூறியதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, நான் அந்த நேரத்தில் மத்திய அரசை விமர்சித்ததாகவும், தற்போது நிலை மாறிவிட்டேன் என்று மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் சொல்வது முற்றிலும் தவறான ஒரு கூற்று ஆகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதிப்பகிர்விற்குப் பின்னரும் மாநில அரசு வருவாய்ப் பற்றாக் குறையையே சந்திக்கும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இவ்வறிக்கை ஏற்றுக்கொண்டதையே இது குறிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர்,
“எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தும்” எனவும் தெரிவித்துள்ளார்.
2018-19ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கு 14வது நிதி குழுவினால் இயற்றப்பட்ட அநீதிகள் குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்திருந்தேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் ஒருபொழுதும் அநீதி ஏற்படக்கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை. அந்தக் கொள்கையிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம் என்றும் கூறியுள்ளதோடு,
ஏற்கெனவே தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை 2020-21ல் 15-வது நிதிக்குழு பரிந்துரையின் மீது தமிழக அரசு தனது நிலையை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கேள்விகளுக்கு நான் ஏற்கெனவே தெளிவாக பதிலளித்த நிலையில் மேலும் சில கேள்விகளை அவர் தற்போது வினவியுள்ளார். நான் என்னுடைய அறிக்கையில் மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவதன் காரணமாக நமக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை வலியுறுத்தி இது குறித்து நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை அரசு தயார் செய்து வருகிறது என்று குறிப்பிட்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15-வது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை தொடர்ந்து நிலை நிறுத்துவோம் என தெரிவித்துள்ள பின்னரும் இதுபோன்ற வினாக்கள் எழுப்பப்படுவது வேதனை அளிக்கிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்திய நாடும், தமிழ்நாடும் கொடூரமான கொரோனா நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக ஆற்றவேண்டிய உடனடி பணிகளைப் பற்றி கவலைப்படாமல் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கத்தக்கது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு எப்பொழுதும் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழக மக்களின் நலன்களையும் யாருக்காகவும், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
**எழில்**�,