’அரசியல் என்பது Script (எழுதியதை படிப்பது) அல்ல.. முழு நேர பொறுப்பு கொண்டது” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன், நாமல் ராஜபக்சே அறிவுரை வழங்கியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
விஜய்க்கு நாமல் ராஜபக்சே அண்மையில் வாழ்த்து தெரிவித்திருந்தது பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து India Today ஊடகத்துக்கு நாமல் ராஜபக்சே சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
ஸ்கிரிப்ட் அல்ல
அதில், “அரசியல் என்பது ஸ்கிரிப்ட் அல்ல.. முழு நேர பொறுப்புக்குரியது. விஜய்யின் அரசியல் வருகை எல்லைகளைத் தாண்டி ஆர்வத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வாக்குறுதிகள்
அரசியலை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் எதை செய்ய முடியுமோ அதையே மக்களுக்கு வாக்குறுதியாக கொடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மக்களின் உணர்வுகள், திரைப்படங்களில் காண்பிப்பதை விட வேறானவை. ஒரு அரசியல்வாதியாக இன்னும் பரிசோதிக்கப்படவர் வேண்டியவர்தான். இந்த அரசியல் அவரை எங்கே கொண்டு செல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கச்சத்தீவு
தமிழக அரசியல் என்பது இலங்கை பிரச்சனையில் உணர்ச்சிப்பூர்வமாகத்தான் இருந்து வருகிறது. இலங்கையை தமிழ்நாடும் இந்தியாவும் நட்புசக்தியாகவே பார்க்க வேண்டும்.
கச்சத்தீவு என்பது இருநாடுகளிடையேயான ஒரு ஒப்பந்தம். தற்போது இலங்கையின் ஒரு பகுதி. இரண்டு மத்திய அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். மாநில அரசுகள் தொடர்புடையது அல்ல” என நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தவெக கொந்தளிப்பு
நாமல் ராஜபக்சேவின் இந்த பேட்டி மற்றும் அறிவுரைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தவெக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தமது எக்ஸ் பக்கத்தில், “இலங்கையைக் குட்டிச் சுவராக்கிய ஒரு குடும்பக் கொடுங்கோல் ஆட்சியின் உறுப்பினர்
நமல் ராஜபக்ச, விஜய்யைப் பற்றிப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பல லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்து, ஒரு இனத்தையே அழித்தொழித்த போர்க்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உங்கள் குடும்பம், வாக்குறுதி மற்றும் நிர்வாகத்தைப் பற்றிப் பேசலாமா?
சர்வதேச நீதிமன்றத்திலும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலும் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லத் முடியாதவர்கள் நீங்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து, மக்கள் புரட்சியால் நாட்டை விட்டே ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட கூட்டம் நீங்கள்.
அரசியல் வருகையின் போதே எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஒரே பாதுகாப்பும் தீர்வுமாக இருக்கப்போவது பொது வாக்கெடுப்பு மட்டுமே என்று முழக்கமிட்டு கொண்டே வந்தது தமிழக வெற்றிக் கழகம். விஜய், எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவர் காட்டும் பாதை மக்களுக்கானது. அது இரத்தத்தால் எழுதப்பட்டது அல்ல; அது அவரின் வியர்வையாலும் மக்களின் நம்பிக்கையாலும் உருவானது.
தமிழினப் படுகொலைக்குக் காரணமானவர்கள், தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் துடிக்கும் விஜய்யைப் பற்றிப் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் போலி அறிவுரைகளை உங்கள் குடும்பத்திற்கு சொல்லுங்கள் எங்களுக்குத் தேவையில்லை. தமிழகத்தில் விஜய்யின் அரசியல் புரட்சி தொடரும்” என பதிவிட்டுள்ளார்.
