அக்னிபத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றனர் என கார்கிலில் பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை 1999ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப் பாகிஸ்தான் செய்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
இந்நிலையில் 25ஆவது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) காலை கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “கார்கில் போரில் நாம் வெற்றி மட்டும் பெறவில்லை. உண்மை, கட்டுப்பாடு, வலிமை என்றால் இதுதான் என்பதற்கு நாம் அற்புதமான உதாரணத்தைக் காட்டினோம்.
அந்த நேரத்தில் இந்தியா அமைதியை விரும்பியது என அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் மீண்டும் அதன் முகத்தைக் காட்டியது. ஆனால் உண்மையின் முன் பொய்யும் பயங்கரமும் தோற்கடிக்கப்பட்டன.
தேசத்துக்காகச் செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது ஒழுக்கக்கேடான மற்றும் வெட்கக்கேடான முயற்சிகளுக்காகத் தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் பயங்கரவாதிகளின் மோசமான திட்டங்கள் எப்போதும் வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அக்னிபத் திட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் இன்று அக்னிபத் திட்டம். ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை.
ராணுவத்தைத் தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பதுதான் அக்னிபத் திட்டத்தின் குறிக்கோள். ஆனால் சிலர் தேசியப் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய உணர்ச்சிகரமான பிரச்சினையை அரசியல் விவகாரமாக்குகின்றனர். அத்தகைய நபர்கள் ஊழல் செய்து நமது ராணுவத்தைப் பலவீனமாக வைத்திருந்தனர்” என்று எதிர்க்கட்சியினரைத் தாக்கி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Paris Olympics 2024: வில்வித்தையில் மிரட்டிய இந்திய வீரர், வீராங்கனைகள்!
Paris Olympics 2024: வில்வித்தையில் மிரட்டிய இந்திய வீரர், வீராங்கனைகள்!