அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிரச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், வீட்டை காலி செய்ய மறுப்பதாக வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கிரிஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். மனுதாரர் கிரிஜாவும், அவருடைய கணவரும் வயோதிக வயதில் இந்த வீட்டை ராமலிங்கத்திடம் இருந்து திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு முதல் ராமலிங்கம் வீட்டு வாடகையையும் செலுத்தவில்லை. தி.நகர் தண்டபாணி தெருவில் அவருக்குச் சொந்தமாக வீடு இருந்தும், கிரிஜாவுக்கு சொந்தமான வீட்டை காலி செய்ய மறுக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறார். எனவே இவ்வழக்கில் பெருநகர காவல் ஆணையரை எதிர்மனு தாரராகச் சேர்க்கிறேன். அவர், 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்த காவல் துறை, ராமலிங்கத்திடமிருந்து வீடு காலி செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, “அரசியல்வாதிகள், தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும். சுயநலனுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
அரசியல்வாதிகளின் அதிகாரத்தால் மக்கள் மிரட்டப்படுவதையும், பிரச்சினை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் பார்த்துக்கொண்டு இருக்காது” என்று கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
பிரியா
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமி!
உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: அமித் ஷாவுக்கு கடிதம்- தமிழக பாஜகவுக்குள் போட்டி!