உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘Give to Gain’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதை ஐக்கிய நாடுகள் சபை ‘Rights justice action for all women and Girls’ என அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள் என மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “வெல்லும் தமிழ்ப் பெண்களே…
நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்குத் துணை நிற்க Dravidian Model – உம் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது Dravidian Model அரசு இருக்கிறது… அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! ” என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!
ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் , விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.
பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட,
நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன் ,
தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும்,
மீண்டும் என் இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “நம் வாழ்வில் யாதுமாகி நிறைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!
கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம். அறிவியல் முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையாலும் துணிவாலும் சாதித்து வருவது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் பெரும் ஊக்கமாக உள்ளது. அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் நம் எதிர்காலத்தை இன்னும் நம்பிக்கையுடனும் வளமுடனும் வடிவமைக்கின்றன.
இந்த சிறப்பான நாளில், ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியாக இணைவோம். பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மகளிருக்கான சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைவில் கொள்வோம்.
தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம்.
மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்பியுமான கமல் தனது எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.
பகிர்வோம், உயர்வோம்.”என தெரிவித்துள்ளார்.
