மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று (டிசம்பர் 4) எண்ணப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் 36 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது ஜோரம் மக்கள் இயக்கம்.
மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சி என்ற நிலையை உடைத்து, புதியதாக வந்த ஜோரம் மக்கள் இயக்கம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள 40 இடங்களில் 27 இடங்களில் வெற்றி பெற்று, ZPM என்ற ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்க தயாராகிறது.
ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் இருந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஜோரம்தங்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
ஜோரம்தங்காவுடன், துணை முதல்வர் டவ்ன்லூயா, அமைச்சர்கள் லால்ருத்கிமா மற்றும் ஆர் லால்தாங்லியானா மற்றும் மாநிலத்தின் ஒரே ராஜ்யசபா எம்.பி.யான கே.வன்லால்வேனா ஆகியோரும் தோற்றிருக்கிறார்கள்.
2018ல் 26 இடங்களில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணி இப்போது வெறும் 9 இடங்களே பெற்றுள்ளது.
அதேநேரம் ஜோரம் மக்கள் இயக்கம் கடந்த முறை வென்ற எட்டு இடங்களிலிருந்து இப்போது 27 ஆக வளர்ந்துள்ளது.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக பாஜக இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.
கடந்த 35 வருடங்களாக வாக்காளர்கள் MNF மற்றும் காங்கிரஸுக்கு இடையே மாறி மாறி வாக்களித்து வந்தனர். இம்முறை ஜோரம் மக்கள் இயக்கத்தின் வடிவில் மூன்றாவது சக்தி மிசோரத்தைக் கைப்பற்றியுள்ளது.
2017 இல் ஆறு சிறிய பிராந்திய கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டணியாக ஜோரம் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது.
2018 இல் அது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை, அதற்கு பதிலாக 38 சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்தது, அவர்களில் எட்டு பேர் வெற்றி பெற்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகப் போட்டியிட்ட அதன் முதல் தேர்தல் இதுவாகும்.
மறுபுறம், மாநிலத்தில் இன்னும் மோசமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை அரசாங்கத்தில் இருந்த பிறகு, 2018 இல் கட்சி ஐந்து இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த முறை, கட்சி ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…