ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் அதானி குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
சோலார் ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபர் கெளதம் அதானி ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் என்று அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
“அதானி குழுமத்தின் சோலார் மின் ஆலைகளால் தயாரிக்கப்படும் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை ஆந்திர மாநில அரசுக்கு அதானி க்ரீன் எனர்ஜி வழங்க முயற்சி செய்தது.
மாநில அரசு நிர்ணயித்த விலையுடன் அது ஒத்துப்போகவில்லை என்பதால் மின்சாரத்தை வாங்கவில்லை. இதனையடுத்து ஆந்திர மாநில உயர் அரசு அதிகாரிகளை அதானி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் ஆந்திர மாநில அரசு ( ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு) மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டது. அதானி தரப்பில் ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.1,750 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடமிருந்து (SECI) 7,000 மெகாவாட் மின்சாரத்தை ஆந்திரப் பிரதேச அரசு மிகக் குறைந்த கட்டணத்தில் வாங்கியது. அதன்படி 25 ஆண்டுகளுக்கு கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.2.49 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்பட்டது.
SECI என்பது இந்திய அரசு நிறுவனம். ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் அதானி குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனவே, குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அரசு உதவவில்லை’- 7 நடிகர்கள் மீது பாலியல் வழக்கை வாபஸ் பெறும் கேரள நடிகை!
அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தமா? – வெள்ளை அறிக்கை கேட்கும் பிரேமலதா