வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்… அரசுக்கு அண்ணாமலை, ராமதாஸ் கண்டனம்!

Published On:

| By Kavi

கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்தசூழலில் அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

எனினும் அவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடிக்க முயன்றிருக்கின்றனர்.

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

உடல் முழுவதும் தீ பரவி அவர் அங்குமிங்கும் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரை காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் ராஜ்குமாரின் உடல் 50 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில் அவரை சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்த திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் எனக் கூறி  இடிக்கப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

ஆனால் மாநில மதுவிலக்குத் துறை அமைச்சரான வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.

அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டை இடிக்க துடிப்பது ஏன்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்?

திமுக ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும், நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருப்பதையே கும்மிடிப்பூண்டி நிகழ்வு காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழைகள் வாழவே முடியாது.

கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு

ஸ்மார்ட் சிட்டி இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது!!!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share