கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர்களை வரவேற்க, கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் விபத்தில் மரணமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போலுபள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 15) அரசு விழா நடைபெற்றது.
விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக,அவர்களுக்கு வரவேற்பு கொடுக்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார்.
சாலைகளில் கொடிகள் கட்டுவது, டிஜிட்டல் பேனர்கள் வைப்பது போன்ற பொறுப்புகளைப் பொதுக்குழு உறுப்பினர் அசலாமிடம் ஒப்படைத்தார் மதியழகன் .
அதன்படி, சாலையில் 300 கழகக் கொடிகளுடன் போஸ்ட் நடவும், பேனர்கள் வைக்கவும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அருளிடம் கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது.
அருள், ஆட்களை அழைத்து வந்து நேற்று முன்தினம் இரவு முதல் பேனர்கள் கட்டுவது சாலைகளின் இருபக்கமும் கொடி போஸ்ட்களை நடுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞரும் இந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் TN 29 V 3197 என்ற டாடா யோதா வாகனத்திலிருந்து கொடிகளை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது சேலத்திலிருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்து ( TN 30 N 1782) மோதியதில் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அமைச்சர்களின் வருகைக்காகக் கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் பேருந்து மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி பரவினால் பெரும் விமர்சனமாகும் என்று நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக டேவிட்டின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக கொடி மற்றும் பேனர்கள் வைக்கும் வேலையை எடுத்த அருளைத் தொடர்புகொண்டு விசாரித்தோம்.
அவர் கூறுகையில், “கொடிகட்டும்போது விபத்து நடக்கவில்லை. சேலத்திலிருந்து சாமந்தி பூ ஓசூருக்கு ஏற்றிச் செல்லும்போது நடந்த விபத்தில்தான் இறந்து விட்டார்” என்று பதிலளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற விபத்துகளையும், விமர்சனங்களையும் தவிர்க்கத்தான் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், கட்டவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்.
இதை பின்பற்றாததாலேயே இன்று டேவிட் உயிரிழந்திருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதுபோன்று டேவிட்டின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
வணங்காமுடி
தீபாவளி ஷாப்பிங்:மக்கள் வெள்ளத்தில் தி நகர்! போலீஸ் தீவிர கண்காணிப்பு!
137 ஆண்டுகளில் 6ஆவது முறையாக காங்கிரஸ் தேர்தல் : இதுவரை வெற்றி பெற்றவர்கள் யார் யார்?