அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ’துரோகி’ என்று கோஷமிட்ட ஒரு இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அக்கட்சி இரு அணியாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர டி.டி.வி, சசிகலா தலைமையில் ஒரு தரப்பும் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. எனினும் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கையில் இன்று (மார்ச் 11) நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் ராஜேஷ் என்ற இளைஞர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
பின்னர் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் விமான நிலைய வாயிலுக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ பதிவு செய்த ராஜேஷ் அதே பேருந்தில் பயணித்த எடப்பாடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
அவர், “துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகத்தை செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டவர்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்று முழக்கமிட்டார். அப்போது எடப்பாடிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அந்த வாலிபரின் வீடியோவை கையால் தட்டிவிட்டார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், “அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்தவர் என்றும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரின் மகன் ராஜேஷ்வரன் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று ராஜேஷ் முழக்கமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
அயோத்தி: முடிவுக்கு வந்த கதை திருட்டு பிரச்சினை!
”தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுமையிலும்…”- கோவையில் ஸ்டாலின் உறுதி!