தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் இன்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணி கட்சி முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மற்றொரு பக்கம் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அப்போது பேசிய திமுக எம்.பி. வில்சன், “அரசியலமைப்பு சட்டத்தில் ஆர்டிகிள் 270படி, வரி வசூலித்துவிட்டு அதை மாநிலத்துக்கு கொடுத்துவிட வேண்டும். ஆனால் இந்த ஒன்றிய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் சரத்துகளை மதிப்பதில்லை. தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 22.27 லட்சம் கோடி ரூபாய் வரியாக மத்திய அரசு வசூல் செய்திருக்கிறது. ஆனால் 6.42 லட்சம் கோடி ரூபாய் தான் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 26 பைசாதான் கொடுக்கிறார்கள்.
ஆனால் உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் அந்த மாநிலம் 3.41 லட்சம் கோடிதான் கொடுத்திருக்கிறது. அதுவே அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு 6.9 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் பழித்தீர்க்கக் கூடிய ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை நிராகரிக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், “தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசு காப்பி அடிக்கிறது. தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது கோயில்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து உண்டியலில் காசு போடாதீர்கள்… தட்டில் போடுங்கள் என்று சொல்கிறார் நிதியமைச்சர். எவ்வளவு வக்கிர புத்தி… அந்த காசு தமிழக அரசுக்கு போகிறதாம்… நாங்கள் மக்களிடம் சொல்லட்டுமா வரி கட்டாதீர்கள் என்று…
நிர்மலா சீதாராமனுக்கு மக்களை பற்றி கவலையில்லை. சந்திரபாபு நாயுடுவுக்கும் மோடி நிதி கொடுக்கவில்லை, கடனாகத்தான் வழங்கியுள்ளார்” என்று காட்டமாக விமர்சித்தார்.
ஆளுநர் மாளிகை அருகே தென் சென்னை தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எம்.பி கனிமொழி, “பாஜக மைனாரிட்டி மக்களுக்கு எதிரானது. அதனால்தான் இன்று மைனாரிட்டி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆட்சி பொறுப்பில் பிரதமராக மோடி நீடிக்க வேண்டும் என்றால் பிகார், ஆந்திரா ஆதரவு அளிக்க வேண்டும். அதனால் தான் இந்த மாநிலங்கள் மீது மோடிக்கு அக்கறை அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி வெள்ளத்தின் போது இங்கு வந்து ஆய்வுவிட்டு சென்றது சென்றதுதான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர் மதுரை, கோவை, தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி என அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
மறுபக்கம், “வரி வாங்க தெரியுது, திரும்ப கொடுக்க தெரியாதா” என்ற போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஒட்டியுள்ளனர். அதில், ஜிஎஸ்டி வரியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவுனு பாருங்க!!!
“இது என்ன விமானமா? ரோலர் ஹோஸ்டரா?”: அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ!