”ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” – அமீர் எச்சரிக்கை!
பிறப்பால் இனி ஒருவர் முதல்வராகக் கூடாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் அமீர் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “தமிழகத்தில் 2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை. பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது” என்று திமுகவையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரையும் குறிப்பிடாமல் கடுமையாக பேசியிருந்தார்.
அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஆதவ் அர்ஜூனா குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனா நட்பு, விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல!
இந்த நிலையில் இயக்குநர் அமீரும், ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதல்வராகவே முடியாது” என்று தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” என்று எச்சரித்துள்ளார்.
எளிய குடும்பத்தில் பிறந்த ஆதவ் அர்ஜுனா, பல்வேறு அமலாக்கத்துறை வழக்குகளில் சிக்கியுள்ள லாட்டரி மன்னன்’ என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இதனை குறிப்பிட்டே ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்துள்ளார் அமீர்.
முன்னதாக, வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகிறோம். அந்த அறிவு கூட அவருக்கு இல்லையா” என்று கோபமாக கூறிவிட்டு சென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!
பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்
“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு