வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் பிரதமர் மோடி மூன்றாவது முறை ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மோடி மூன்றாவது முறையாக ஜூன் 9ஆம் தேதி மாலை 7 15 மணிக்கு பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடைபெற்று வரும் வேளையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் யோகி ஆதித்யநாத், தனது அரசின் முக்கிய அமைச்சர்களையும் மாநில பாஜக நிர்வாகிகளையும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு கட்சியும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி, அதில் புதிய மக்களவைக்கான கட்சி நிர்வாகிகள் யார் யார் என்பதை தேர்வு செய்வார்கள்.
அதன்படி தான் ஜூன் 8-ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதிலே மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி இந்த பதவியை ஏற்பது பற்றி நான் யோசித்து விரைவில் முடிவு சொல்கிறேன் என்று காங்கிரஸ் எம்பிக்கள் இடம் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் மக்களவை, மாநிலங்களவை என இரண்டையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதுபோல திருணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டமும் இன்று நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் முதலில் தனியாக கூட்டம் கூட்டப்பட்டு அதில் நாடாளுமன்ற பாஜக தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டி கூட்டணி தலைவராக மோடியை தேர்வு செய்திருக்க வேண்டும்.
ஆனால் நேற்று ஜூன் 7 ஆம் தேதி அவசர அவசரமாக தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தைக் கூட்டி, அதற்கு மோடியை தலைவராக தேர்வு செய்து… அதோடு பாஜக நாடாளுமன்ற கட்சியின் தலைவராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இப்படி, ’ஒன்றுக்குள் ஒன்று’ என்ற உத்தியை கடைப்பிடித்திருக்கிறார்கள்.
இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, “இந்த முறை மோடி முழுமையான மெஜாரிட்டி பெறாமல் போனதற்கு உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான தோல்வி காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தோல்விக்கு காரணம் யார் என்று பார்த்தால் உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அல்ல…
தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின் போது உத்திர பிரதேச மாநிலத்தில் சிறப்பாக செயல்படாத எம்பிக்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி புதியவர்கள் அடங்கிய, சமாஜ்வாதி கட்சியின் வியூகத்துக்கு பதிலடி கொடுப்பதற்கு ஏற்ற வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தார் யோகி ஆதித்யநாத். ஆனால் டெல்லியில் இருந்து அமித்ஷா தனியாக ஒரு வேட்பாளர் பட்டியலை தயாரித்தார். அந்தப் பட்டியலைதான் அவர் லக்னோவுக்கு அனுப்பினார். அந்த பட்டியலில் யோகி ஆதித்யநாத் சிபாரிசு செய்த 28 வேட்பாளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த யோகி ஆதித்யநாத் தரப்பினர், கள நிலவரத்துக்கு ஏற்ற வேட்பாளர்கள் இல்லை என்று சொல்லப்பட்ட போதும் அமித்ஷா தரப்பில் அது கண்டு கொள்ளப்படவில்லை. யோகி பரிந்துரைத்த வேட்பாளர்களுக்கு பதிலாக அமித் ஷா அறிவித்த வேட்பாளர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
இதுதான் உத்தரபிரதேச தோல்விக்கு காரணம். எங்கே, பாஜக நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை தனியாக நடத்தினால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து விடுமோ என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தோடு சேர்த்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு விட்டது.
இருந்தாலும் இந்த விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே விரைவில் பூதாகரமாக வெடிக்க காத்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜகவின் சீனியர் தலைவர்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து வாட்ஸப் ஆப் லைன் போனது வாட்ஸ் அப்.
மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? : விஜய்சேதுபதி விளக்கம்!