உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை மும்பை போலிஸார் இன்று(நவம்பர் 3) கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 20-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாஜக மற்றும் ‘மகாயுதி’ கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்வதற்காக மகாராஷ்டிராவிற்கு வரவிருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று(நவம்பர் 2) மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸப் எண்ணுக்கு “யோகி ஆதித்யநாத் தனது முதலமைச்சர் பதவியை 10 நாட்களில் ராஜினாமா செய்யாவிட்டால், முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல், அவரும் கொலை செய்யப்படுவார்” என்று மிரட்டல் வந்துள்ளது.
இந்த மிரட்டல் செய்தியைப் பெற்றவுடன், மும்பை பயங்கரவாத தடுப்பு படையும் மும்பை போலீஸும், மிரட்டல் விடுத்த நபரைத் தேடத் தொடங்கியது.
அவர்கள் நடத்திய விசாரணையில், மும்பை தானே பகுதியை சேர்ந்த ஃபாத்திமா கான் என்ற பெண் தான் இந்த மிரட்டலை விடுத்துள்ளார் என்று தெரியவந்தது. உடனடியாக அவரை இன்று(நவம்பர் 3) கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த கைது பற்றிக் கூறிய மும்பை போலீஸ் “பட்டம் பெற்றுள்ள அந்த பெண், சற்று மனநலம் சரியில்லாதவராக உள்ளார்” என்று தெரிவித்தது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு! – கலெக்டர் அறிவிப்பு!