yogi adityanath blessings rajinikanth

51 வயது யோகி காலில் விழுந்த 72 வயது ரஜினி

அரசியல் சினிமா

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்தது தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி இடங்களுக்கு சென்றார். நேற்று (ஆகஸ்ட் 19) காலை ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று சன்னியாசிகளை சந்தித்தார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்றார். முன்னதாக ராஞ்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நாளை ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று காலை உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை மரியாதை நிமித்தமாக ரஜினி சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் மதியம் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் பாலாசியோ மாலில் ஜெயிலர் திரைப்படம் பார்த்தார்.

படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, “ஜெயிலர் படத்தின் தொடக்க காட்சிகளை பார்த்தேன். இது நல்ல அனுபவமாக இருந்தது. ரஜினிகாந்தை உத்தரபிரதேசத்திற்கு வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன்.

காவல்துறை அதிகாரிகளின் எளிமையான வாழ்க்கையை இப்படம் சித்தரிக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.

துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த பின்னர் இரவு 7 மணியளவில் லக்னோவில் உள்ள உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு ரஜினிகாந்த் சென்றார்.

அங்கு அவரை வரவேற்பதற்காக யோகி ஆதித்யநாத் தனது வீட்டு வாசலில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

ரஜினி தனது காரிலிருந்து இறங்கி யோகி ஆதித்யநாத்துக்கு வணக்கம் வைத்தபடி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பின்னர் அவரிடமிருந்து பூங்கொத்தை பெற்றுக்கொண்டார். ரஜினிகாந்தை வீட்டிற்குள் அழைத்து சென்ற யோகி புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழகத்தின் உச்சநட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் கூட இதனை விரும்பவில்லை. “72 வயதான தலைவர் ரஜினி 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழ வேண்டுமா” என்று வேதனையுடன் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

செல்வம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

திமுக போராட்டம்: சென்னையில் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

2 thoughts on “51 வயது யோகி காலில் விழுந்த 72 வயது ரஜினி

  1. ஆக எதோ ஒரு அஜெண்டாவோட இமயமலைப் பயணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *