பாஜகவில் நிலவும் உட்கட்சி சதியே எடியூரப்பா வீட்டில் நேற்று (மார்ச் 27) தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காரணம் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு சதவீதத்தை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு உயர்த்தியுள்ளது.
அதேவேளையில் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் பழங்குடியினர் வகுப்பில் உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாரா வகுப்பினர் நேற்று கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தினர். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவில் ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் எடியூரப்பாவின் வீட்டின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எடியூரப்பா வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த கார், மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன.
எனினும் எடியூரப்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் வசிப்பதால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 4 போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஷிகாரிப்புராவில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடியூரப்பா வீடு மீதான தாக்குதல் அவருக்கு எதிரான பாஜகவின் உள் சதி தான் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஆட்சியில் இருப்பவர்கள் மீது மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது இயல்பானது. ஆனால், முதல்வர் இல்லம் அல்லது தற்போது ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்குப் பதிலாக, எடியூரப்பாவின் வீடு குறிவைக்கப்பட்டது.
எடியூரப்பா எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் ஒரு பிரதிநிதி மட்டுமே. எடியூரப்பாவை அரசியலில் ஓரங்கட்ட அக்கட்சியினரே விரும்புகின்றனர். இப்போது நடந்த சம்பவம் அவருக்கு எதிராக நடந்து வரும் உட்கட்சி சதிக்கு நல்ல சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தாக்குதலின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக கர்நாடக முதல்வர் பொம்மை கூறியிருந்தார்.
இதற்கிடையில், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ஷிகாரிபுராவில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எனினும் தன் வீட்டின் மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாரா சமூகத் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துத்துவேன் என்றும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆதார் – பான் கார்டு இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!
அப்பீல் பன்னீர்… அப்பால் எடப்பாடி… அதிமுக பொதுச் செயலாளர் ஆன வரலாறு!