குற்றாலம்…. சிவாஜி பாஷையில் சொன்னால், ’பேரைக் கேட்டவுடனே ச்சும்மா குளிருதுல்ல’.
தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குற்றால அருவியில் குளிப்பது என்பது அப்படி ஒரு சுகம். இதற்காகவே ஒவ்வொரு சீசனுக்கும் குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் ஜூன், ஜூலை, ஆகஸ்டுதான் குற்றால அருவியின் சீசன். விட்டுவிட்டு அடிக்கும் சாரல் மழை அந்த குளிர்ந்த காற்றுக்கிடையே கொட்டும் அருவி என்று அந்த அனுபவம் நீர்வீழ்ச்சியை தோளில் தாங்கியவர்களுக்குத்தான் தெரியும்.

வருடத்துக்கு மூன்று மாதங்களே சீசன். அதிலும் கனமழைப் பொழிவு ஏற்பட்டால் அருவியில் குளிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று பல பேர் குற்றாலத்தை கண்ணால் பார்த்துவிட்டு குளிக்க முடியாமல் கண்களில் நீர்வீழ்ச்சியோடு திரும்புவார்கள். ‘ஏன் தான் இதுக்கு சீசன்னு இருக்கோ… வருஷத்துல எல்லா மாசமும் சீசனா இருக்காதா..?’ என்று அருவி இரைச்சலுக்கு இடையே ஒரு இளம்பெண் தனது தாயிடம் கேட்டார். இதுபோல் எத்தனையோ பேர் குற்றால அருவியின் சீற்றத்தை தூரத்தில் இருந்தே பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே புறப்பட்டுள்ளனர்.
சீசனில் மட்டும்தான் கொட்ட வேண்டுமா குற்றால அருவி? ஏன் பிற மாதங்களிலும் அருவியை கொட்ட வைக்க முடியாதா? முடியும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டிருக்கிறார் திமுகவின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பொ. சிவ பத்மநாதன்.

குற்றால சீசனை எப்படி நீட்டிக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சென்னைக்கு வந்து வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரனையும், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும் சந்தித்து விரிவான செயல் திட்ட மனுவை கோரிக்கையாக வைத்திருக்கிறார் சிவ பத்மநாதன்.
அவரிடமே இதுகுறித்து கேட்டோம். “குற்றால அருவியை நாங்கள் அதாவது தென்காசிகாரர்கள் ஒவ்வொரு சீசனின்போதும் தவறாமல் அனுபவித்து வருகிறோம். ஆனால் வெளியூர்காரர்கள் ஒவ்வொரு வருடமும் சீசனுக்கு வந்தும் குற்றால அருவியில் குளிக்க முடியாமல் ஏமாந்து போகிறார்கள். இதுகுறித்து ஆராய்ந்தபோதுதான் குற்றால அருவியை வருடம் முழுதும் பொழிய வைக்க இயற்கையே சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து எங்களுக்கு முன்னோடிகள் குற்றாலம் பஞ்சாயத்தில் இருந்து பல கோரிக்கைகளை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது நாங்கள் எங்கள் ஆட்சியிலே இதை செயல்படுத்திட மிக வலிமையான முன்னெடுப்பை எடுத்திருக்கிறோம்” என்றவர் அது தொடர்பாக விளக்கினார்.
“குற்றாலம் அருவியில் குளிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுதுமிருந்தும் மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சீசன்களில் குற்றால அருவியில் குளிப்பதற்கு வரிசையில் நிற்பது திருப்பதி தேவஸ்தான வரிசையைப் போல் காணப்படும். அருவிகளின் மழை பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் தண்ணீர் படிப்படியாக குறைந்து ஒரு வாரத்தில் நூலிழை போல நீர் விழும் துர்பாக்கியமான நிலையை சமீபகாலமாக காண முடிகிறது. இதற்கு காரணம் மலைப் பகுதியில் நீர் பிடிப்புப் பகுதி மிகவும் குறைவு.
குற்றாலம் என்பது ஏழைகளின் ஊட்டி, இல்லாதவர்களின் கொடைக்கானல். இப்படி ஏழை எளியவர்களும் நடுத்தர மக்களும் பெரும்பாலும் வந்து மகிழ்ந்து செல்லும் குற்றால அருவியில் நிரந்தரமாக தண்ணீர் எப்போதுமே பொழியும் வகையில் செய்ய வழி வகைகள் உள்ளன.

பேரருவிக்கு மேல் 3 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கையாகவே மூன்று புறமும் அரண்களாக மலை முகடுகள் சூழ்ந்துள்ள தனியாருக்கு பாத்தியப்பட்ட தெற்கு மலை எஸ்டேட் அருகில் டிக்கெட் பாறை என்னும் இடத்தை ஒட்டி 600 மீட்டர் நீளத்துக்கு இரு மலைகளுக்கு இடையே அணைக்கட்டு ஒன்றைக் கட்டலாம். கேரள மாநிலம் இடுக்கியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் Arch type Dam போல கட்டி தண்ணீரைத் தேக்குவதன் மூலம் வருடம் முழுதும் அருவியில் நீரை வர வைக்கலாம்” என்ற சிவபத்மநாதனிடம், ‘இது இயற்கைக்கு முரணாக இருக்காதா?” என்று கேட்டோம்.

“குற்றாலத்தில் பேரருவிக்கு மேலே இயற்கையாக மூன்று புறங்களிலும் அரண்கள் போல மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் இது இயற்கைக்கு முரணானது அல்ல. மேலும் இதுபோல ஏற்கனவே அணைக் கட்டமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த அணைக்கட்டு கட்ட ஆகும் செலவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அதேநேரம் இதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் அதிகமானவை.
மேலே அணைகட்டி நீரைத் தேக்கி வைத்தால் வருடம் முழுதும் நான்கு பருவ காலங்களிலும் நிரந்தரமாக குறிப்பிட்ட அளவு தண்ணீரை அருவிகளில் விழ வைக்கலாம். இதனால் திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம். பாறைகள், கற்கள் திடீரென விழுவதைத் தடுக்கலாம். வெள்ளப் பெருக்கால் ஏற்படும் உயிர் சேதங்களையும், பொருட் சேதங்களையும் தடுக்கலாம்.
வெறும் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல குற்றாலம் அதை சுற்றியுள்ள தென்காசி. செங்கோட்டை வட்டார மக்களுக்கு வருடம் முழுதும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கலாம். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும். தென்காசி, செங்கோட்டை விவசாயிகளுக்கும் பாசன நீர் கிடைத்து இதனால் பெரும் பலன் கிட்டும்.

அணை கட்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து பேரருவி வரை செங்குத்தாக நீர் வரத்து அமைந்துள்ளதால் மின் உற்பத்தி நிலையம் கூட அமைக்க முடியும். கோடைக் காலத்தில் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவை ஊர் பகுதிகளுக்குள் இறங்கி வருவதையும் தடுக்கலாம். அணைக்கட்டு அமைப்பதன் மூலம் மீன் வளத்தையும் பெருக்க முடியும், காடு வளமும் பெருகும்.
வருடம் முழுதும் குற்றாலத்தில் அருவி பொழியும் நிலை ஏற்பட்டால் குற்றாலத்தை ஒட்டிய பகுதிகளில் தொழில் முதலீடு அதிகரிக்கும். இதனால் தென்காசி மாவட்டமே பொருளாதார ரீதியாக முன்னேறும்” என்று பட்டியலிட்டார் சிவபத்மநாதன்.
மேலும் அவர், “ஆய்வு செய்து அணைக் கட்டு கட்டுவதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் செலவாகும். ஒரே ஒரு வருடம் சீசன் சீராக இல்லையென்றால் ஏற்படும் இழப்பை கணக்குப் போட்டுப் பார்த்தால் அணை கட்டும் செலவு பெரிதாகத் தெரியாது. குற்றாலத்தின் பழமையை பேசும் அதே நேரம் குற்றாலத்தை நவீனமாக இயற்கைக்கு இணக்கமாக புதுமைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது குற்றால அருவி மட்டுமல்ல, தென்காசி மாவட்டமே வற்றாது வளம் கொழிக்கும்.
இந்த முக்கியமான விவகாரம் தொடர்பாக நவம்பர் 3 ஆம் தேதி சென்னையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களையும், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களையும் சந்தித்து விரிவான மனுக்களைக் கொடுத்துள்ளேன் என்றார் நம்பிக்கையாய் சிவ பத்மநாதன்.
காத்திருப்போம். இந்த குற்றாலப் பெருங்கனவு நனவாகிறதா என்று!
–ஆரா
அனிதா ராதாகிருஷ்ணன் மனு: உச்சநீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்!
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் பெரியண்ணன் தனம்- காங்கிரஸ் எம்.பி.க்கள் குமுறல்!