புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

மோகன ரூபன் 

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்கா வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்ற முதல் இடதுசாரி தலைவர் என்ற பெருமையை இன்று அவர் பெற்றிருக்கிறார்.

1987ஆம் ஆண்டு ஜே.வி.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) அமைப்பில் இணைந்த இவர், இப்போது அந்த அமைப்பின் தலைவரும் கூட.

அனுர குமார திசநாயக்கா, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நேரத்தில், நான் கொழும்பு நகரில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில், 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய (அல்லது நடத்த முயன்ற) புரட்சியைப்பற்றி இப்போது நினைவு கூர்கிறேன்.

அப்போது நான் சிறுவன். சற்று மங்கலான காட்சிகளே என் மனதில் இருக்கின்றன. இலங்கைத் தலைநகர் கொழும்பில், அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது எல்லாம் நினைவில் நிற்கிறது.

நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த, இலங்கை வானொலியில், அப்போது அடிக்கொருமுறை ஒரு தேசபக்தி பாடல் ஒலிபரப்பாகும். ‘நமது நாடு நமது நாடு நம்நாடு’ என்று அந்தப் பாடல் தொடங்கும்.

ஜே.வி.பி. புரட்சி நடந்த அந்த காலகட்டத்தில், சட்டைகளில் கருப்பு நிற பொத்தான் வைக்கும் ஒரு நாகரீக மோகம் கொழும்பு நகரத்தில் இருந்தது.

இந்தநிலையில், சட்டையில் கருப்பு பொத்தான் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஜே.வி.பி. இயக்கத்தவர்கள் என்ற பரபரப்பு ஒன்று திடீரென பரவியது. அது உண்மையா வதந்தியா என்று தெரியாது.

‘ஜே.வி.பி.அமைப்பில், முன்பின் அறிமுகம் இல்லாத இருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களது சட்டைகளில் கருப்புப் பட்டன்கள் இருப்பதைப் பார்த்து தாங்கள் இருவரும் ஒரே அமைப்பினர் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதன்மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்’ என்ற பரபரப்பு அது.

இதையடுத்து அண்ணனின் சட்டையிலும், என் சட்டையிலும் இருந்த கருப்பு பட்டன்கள் என் அக்காள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன. இதுபோல வீடுகள்தோறும் கருப்புப் பட்டன்கள் அகற்றப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். (ஆக, நானும் என் போன்ற பலரும் ஏதோ ஒருவகையில் சிறிது காலம் ஜே.வி.பி. அமைப்பில் இருந்திருக்கிறோம்!)

அதேப்போல, இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் மரண அறிவித்தல்கள் சிலவற்றை ஜே.வி.பி. அமைப்பினரே பொய்யாகத் தருகிறார்கள் என்ற பரபரப்பும் அப்போது நிலவியது.

‘வர்ணகுலசூரிய இன்று மரணமடைந்தார். அவரது நல்லடக்கம் கனத்தை மயானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது’ என்பதுபோன்ற அறிவிப்புகளை ஜே.வி.பி. அமைப்பினர் ரகசிய குறியீட்டு வார்த்தைகளாக மாற்றிப் புரிந்து கொள்கிறார்கள். இலங்கை வானொலியின் மரண அறிவித்தலைப் பயன்படுத்தி அந்த அமைப்பினர் ரகசியக் கூட்டங்களை நடத்துகிறார்கள்’ என்றுகூட அந்த காலகட்டத்தில் ஒரு வதந்தி பரவியது.
அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.

ஜே.வி.பி. புரட்சி நடத்திய காலகட்டத்தில் எர்னஸ்டே சேகுவேராவை என் வயதுள்ள யாருக்கும் தெரியாது. இலங்கையில் அப்போது நடைபெற்ற ஜே.வி.பி. புரட்சி, சேகுவேரா புரட்சி என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது.

சேகுவேரா என்ற பெயர் சேகஒரா என்று அப்போது புழக்கத்தில் இருந்தது. ஒரா என்றால் சிங்கள மொழியில் திருடன் என்று அர்த்தம். எனவே என்னையொத்த சிறுவர்கள் அந்த கால கட்டத்தில் ஜே.வி.பி. அமைப்பை, ‘ஏதோ ஒரு கொள்ளைக்கூட்டம் நாட்டைப் பிடிக்க முயற்சிக்கிறது’ என்ற அடிப்படையிலேயே புரிந்து வைத்திருந்தோம். என் புரிதல் மட்டுமல்ல, என் வயதுள்ள தமிழ், சிங்கள சிறுவர் சிறுமியர்களின் புரிதல் அப்போது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

ஜே.வி.பி நடத்திய புரட்சியை நசுக்க இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது நினைவில் இருக்கிறது. இந்திய ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறப்பதைப் பார்த்து, என்னுடைய தாயார் புளகாகிதமடைந்து, ‘அதோ நம்ம நாட்டு ஹெலிகாப்டர்!’ என்று பரவசமடைந்ததாக ஒரு சிறிய நினைவு உள்ளது.

(இலங்கைக்கு இந்திய ராணுவம் வருவது தமிழர், சிங்களவர் ஆகிய இருதரப்பினருக்குமே நல்லதல்ல என்ற புரிதல் அப்போது என் தாயாருக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழ்ந்த எந்த தாய்மாருக்குமே இருந்திருக்காது.)

‘புரட்சி நசுக்கப்பட்டு, ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஜே.வி.பி. அமைப்பினரின் ஆயிரக்கணக்கான உடல்கள் களனி கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக’ அந்த காலகட்டத்தில் பரபரப்பு நிலவியது.

ஆற்றோரம் கரையொதுங்கிய உடல்களின் கண்களை ‘கபர கொய்யான்’ பிடுங்கித் தின்றுவிட்டதாக என் பள்ளித்தோழன் ஒருவன் கூறி பரபரப்பை பற்ற வைத்தது நினைவிருக்கிறது.

‘கபர கொய்யான்’ என்பது 70களில் இலங்கையில் வாழ்ந்த சிறுவர்களுக்கு ‘ஒரு படு பயங்கரமான மிருகம்’ (கபரக் கொய்யான் என்பது புனுகுப்பூனை(!) என்பதெல்லாம் பின்னர் தெரிந்து கொண்ட விவரம்)

ஜே.வி.பி.யின் புரட்சி முயற்சி தோற்றுப் போய் அந்த இயக்கத்தைச் சேர்ந்த அறுபதாயிரம் இளைஞர்கள் வரை கொல்லப்பட்டனர் என்பது பிற்காலத்தில் நான் தெரிந்து கொண்ட செய்தி. அப்படி பலியானவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன்.

ஆக, புரட்சிகர இடதுசாரி அமைப்பாகக் கருதப்பட்ட ஜே.வி.பி. அமைப்பும்கூட, கொள்கை அடிப்படையில் மற்ற சிங்கள அமைப்புகள், சிங்களக் கட்சிகளைப் போன்றுதான் இருந்திருக்கிறது. ‘இலங்கைத்தீவு தமிழர்களுக்கும் சொந்தம்’ என்பது போன்ற பார்வை ஜே.வி.பி.க்கும் இருந்ததில்லை போலிருக்கிறது.

சரி. பதிவின் இறுதிக்கு வருவோம்.

ஒரு காலத்தில் ஆயுதப் புரட்சி மூலம் அரசைப் பெற முயன்று தோற்ற ஜே.வி.பி. அமைப்பு, பின்னர் அரசியல் கட்சியாக மாறி, இன்று தேசிய மக்கள் கூட்டணியாக உருமாறி இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர், இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார்.

 

அனுர குமார திசநாயக்கா எப்படி ஆட்சி நடத்தப் போகிறார்? தமிழர்கள் விடயத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும்கூட, ஆயுதப் புரட்சியில் தோல்வி கண்டவர்களும், அரசியல் களத்தில் வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை அவரது வெற்றி விதைத்திருக்கிறது.

அதற்காக அரை மனதுடன் அவரை வாழ்த்துவோம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சிறார் ஆபாசப்படம் பார்ப்பது குற்றம்”: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
சீசிங் ராஜா என்கவுண்டர் : சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *