பாஜகவின் தேர்தல் அறிக்கை மோடியின் கியாரண்டி கார்டு என மக்கள் பாராட்டுவதாக கூறிய மோடி, தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியில் இன்று(ஏப். 15) பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.
மோடியின் கியாரண்டி கார்டு!
அப்போது அவர் பேசியதாவது, “தென் இந்தியாவின் இந்த பகுதி வீரத்திற்கும், தேசபக்திக்கும் மிகவும் பிரபலமானது. வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் ஆகியோர் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். முத்துராமலிங்க தேவர் தந்த எழுச்சியால், நேதாஜியின் ராணுவத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர்.
இங்கு கூடியிருக்கும் இந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும்.
தமிழ் புத்தாண்டை நீங்கள் கொண்டாடியிருக்கிறீர்கள். அந்த நாளில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜகவின் தேர்தல் அறிக்கை மோடியின் கியாரண்டி கார்டு என்று மக்கள் பாராட்டுகின்றனர்.
திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. மிக விரைவில் தென் இந்தியாவில் புல்லட் ரெயில் விடப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். புதிய அரசு அமைந்த உடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலக புகழ் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவாதம் அளித்துள்ளோம்.
உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைப்போம் என்று தெரிவித்துள்ளோம்.
தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரப்படும். மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை யோசித்து பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது!
இந்தியா மீது பற்று வைத்திருக்கும் அனைவருக்கும் பாஜகதான் பிடித்தமான கட்சி. பாஜக எப்போதுமே தமிழ் மொழியையும் தமிழ்நாட்டையும் நேசிக்கும் கட்சி. எப்போதும் தமிழக மக்கள் மீது அன்பு வைத்திருக்கும் கட்சி.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது என கருத்துக்கணிப்புகளை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிரதமர் மோடிக்கு எப்படி இந்த ஆதரவு கிடைக்கிறது என்று யோசித்து பல நிபுணர்களும் குழம்பி போயிருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.800 கோடிக்கு நிதியுதவி அளித்துள்ளோம். 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் 1.20 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தேவையான திட்டங்கள் பல நிறைவேற்றியிருப்பதால் அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கிறது.
போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்துவேன்!
கச்சத்தீவை மற்றொரு நாட்டிற்கு தாரைவார்த்தது யார்? கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக – காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தின் ரகசிய செயல்களை பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுக அரசு போதைப் பொருள் விற்பனையை ஊக்குவித்து வருகிறது. போதைப்பொருள் விற்பவர்களை நான் விடமாட்டேன், போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்துவேன்.
திமுக வெறுப்பினால் உருவாக்கப்பட்டது!
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களை நினைத்து பார்க்கிறேன். காமராஜர் என்ற நேர்மையான தலைவரை பாஜக பின்பற்றுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி காமராஜரை அவமதிக்கிறது.
எம்ஜிஆரையும் திமுக அவமதிக்கிறது. ஜெயலலிதாவை சட்டசபையில் திமுக நடத்திய விதத்தை நாம் மறக்க முடியாது.
இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வெறுப்பினாலும் எதிர்ப்புனாலும் உருவாக்கப்பட்டது. அவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கின்றனர். செங்கோலாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டாக இருக்கட்டும், திமுக அதனை எதிர்த்துள்ளது.
பாஜகவினர் யாரும் பயப்பட வேண்டாம்!
2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்றுவது குறித்து 24*7 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் மொழியை உலக அளவில் பிரபலப்படுத்த பாஜக உறுதி பூண்டுள்ளது. பாஜக தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறது.
தமிழகத்தில் எனக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து திமுக அரசுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் பாஜகவினரின் பிரசாரக் கூட்டத்தை தடுக்கும் செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. பாஜகவினர் யாரும் பயப்பட வேண்டாம், ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் தான் உள்ளது.” என மோடி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சென்னையில் கொள்ளை!
மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?
பாஜக நம்மை சீண்டி வருகிறது… தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்!
மறுவிசாரணை கோரும் செந்தில் பாலாஜி