சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் மோதினர்.
இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற 14வது சுற்றில் இருவரும் கடுமையாக போராடிய நிலையில், 58வது நகர்த்தலில் லிரனை வீழ்த்தினார் குகேஷ்.
இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
வரலாறு மற்றும் முன்மாதிரி!
குகேஷின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. இந்த வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
குகேஷ் இந்தியாவை நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்! வெறும் 18 வயதில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளையவர் என்பது ஒரு அற்புதமான சாதனை. உங்கள் ஆர்வமும் உழைப்பும் உறுதியுடன் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை நினைவூட்டுகிறது. வாழ்த்துகள் சாம்பியன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குகேஷ்க்கு வாழ்த்துக்கள். 18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆனார். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியனாக உருவெடுத்ததற்காக, எங்கள் சொந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
SDAT இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து தாய் மண்ணிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் செஸ் மீதான ஆர்வத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
செஸ் விளையாட்டில் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், செஸ் உலக சாம்பியனாக மகுடம் சூடுவது பெருமைக்குரியது. செஸ் உலகில் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சிங்கப்பூரில் நடைபெற்று வந்த FIDE உலக சதுரங்க வாகையர் பட்டப் போட்டிகளின் 14-ஆம் ஆட்டத்தில், சீனத்தைச் சேர்ந்த தற்போதைய வாகையர் டிங் லிரெனை வீழ்த்தி வாகையர் பட்டத்தை வென்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பெரியளவில் பெருமையும் சேர்த்துள்ளார். அவருடைய தீவிர பயிற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
குகேஷ்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 இல் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் சொந்த சதுரங்க நட்சத்திரம், இதுவரை இல்லாத இளைய கிளாசிக்கல் செஸ் உலக சாம்பியனானார். இந்தியாவின் மறுக்கமுடியாத செஸ் கிராண்ட்மாஸ்டருக்கு மகுடத்தில் மற்றொரு நகை.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரசிகர்களுக்கு பர்த்டே ’வைப்’ கொடுத்த ரஜினி… அசத்தும் கூலி பட அப்டேட்!
முதல் ’வைக்கம் விருது’ பெற்ற புரட்சி எழுத்தாளர்! யார் இந்த தேவநூர் மகாதேவா?