அதிமுக, பாஜக என அனைவரின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் ஆட்சிதான் இது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவையில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 25) நடைபெற்றது.
இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எத்தனையோ முறை கோவை வந்திருக்கிறேன். ஆனால் அமைச்சராகப் பொறுப்பேற்று முதன்முறையாகக் கோவை வந்திருக்கிறேன்.
10 ஆண்டுகளாக அரசு நிர்வாகம் செயலற்று கிடந்த நிலையில் அந்த 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து பணியாற்றக் கூடிய ஒரு பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் கொடுத்துள்ளார்.
கோவை மக்கள் இங்கிருந்து ஒரு அமைச்சர் கூட இல்லையே எனக் கவலைப்பட்டிருப்பார்கள். ஆனால் செந்தில் பாலாஜி கரூர் என்றாலும் கூட கோவை செந்தில் பாலாஜி என மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் .
கோவையையும், கரூரையும் இரு கண்களாக அவர் பார்க்கிறார். கோவைக்கு அவரை பொறுப்பு அமைச்சராக நியமித்ததும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மனுக்களை வாங்கினார்.
இவ்வளவு மனுக்களை வாங்குகிறாரே இதையெல்லாம் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
ஆனால் அவற்றையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து இதுவரை 1.57 லட்ச கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு கண்ட்ரோல் ரூமை திறந்துவைத்தார்.
கடந்த ஆட்சி முழுவதும் 2.20 லட்ச மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் 1.5 லட்ச மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுக இல்லையே என்று நினைத்தோம். கோவையை இந்த அரசு புறக்கணித்துவிடும் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் அதெல்லாம் பொய் என்று நிரூபித்திருக்கிறார் செந்தில் பாலாஜி” என திமுக அரசில் கோவைக்குக் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார்.
தமிழகத்திலேயே அதிக திட்டங்களைப் பெற்ற முதல் மாவட்டம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், “எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி.
அதாவது அதிமுக நபராக இருக்கலாம், பாஜக நபராக இருக்கலாம், பாஜகவில் பொய் செய்திகளைப் பரப்புபவராக இருக்கலாம். அவர்களுடையே நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.
உங்கள் தொகுதியில் விளையாட்டு துறைக்கு எதாவது கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் என்னை எப்போதும் சந்தித்துக் கேட்கலாம். அதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.
இளைஞரணி செயலாளர், கலைஞரின் பேரன், முதல்வரின் மகன், அமைச்சர் என எவ்வளவு பெருமை எனக்கு இருந்தாலும், உங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையாக இருக்கத்தான் விரும்புகிறேன். பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.
பிரியா