டிஜிட்டல் திண்ணை: திமுகவினர் குடும்பத்துக்கு வேலை – ஸ்டாலின் போட்ட உத்தரவு!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும் சில போட்டோக்கள் இன்ஸ்டாவில் வந்து விழுந்தன. டிசம்பர் 4 ஆம்  தேதி தமிழ்நாடு முழுவதும்  நடந்த தலையாரி தேர்வுகள் குறித்த  படங்கள்தான் அவை.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.”டிசம்பர் 3 ஆம் தேதி  டிஜிட்டல் திண்ணையில் சீனியர்களை அதிரவைத்த திமுக நிர்வாகிகள் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தியில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் கூட கட்சிக்காரர்களுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்கவில்லை என்று தொண்டர்கள் புலம்புவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தான் டிசம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் 2,748 தலையாரி பணியிடங்களுக்கான அதாவது கிராம உதவியாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. வருவாய் துறைக்கு உட்பட்ட இந்தப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடத்தின.

மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்காக பல மாவட்டங்களில் பலத்த கிராக்கி நிலவுகிறது. ஏனென்றால் தலையாரி வேலை என்றாலும் இதில் சேர்ந்துவிட்டால் அடுத்தடுத்து சீனியாரிட்டி படி வி.ஏ,ஓ, ஆர்.ஐ, என கடைசியில் டெபுடி கலெக்டர் வரை செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இப்போது தலையாரி பணியில் சேர்ந்தால் சுமார் 30, 35 வருடங்களில் டெபுடி கலெக்டர் ரேங்க் வரை செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் இந்த வேலைக்கு இவ்வளவு  எதிர்பார்ப்பும் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தலையாரி வேலைக்காக   திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பலர் 4 லட்சம் முதல் 8 லட்சம் வரை கட்சிக் காரர்களிடம் பெற்றிருப்பதாகவும் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.

இதே பணிக்கு சென்னையில் டிமாண்ட் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதாவது சென்னையில் தலையாரி பணிக்கு 15 லட்சம் வரைக்கும் கூட ஆஃபர் இருக்கிறது என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவால்  தலையாரி வேலைக்காக அட்வான்ஸாக பணம் வாங்கிவிட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஷாக் ஆகியிருக்கிறார்கள்.

தலையாரி வேலையை அந்தந்த கிராமத்தை உள்ளடக்கிய கிளைச் செயலாளர் அல்லது திமுக நிர்வாகியின் மகனுக்கோ மகளுக்கோ உறவினருக்கோ கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்திருக்கும் உத்தரவு.

இந்த வேலைக்காக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை அந்தந்த மாவட்டத்தினர் போய் பார்த்திருக்கிறார்கள்.

அமைச்சர்களோ, ‘இந்த தலையாரி  பணியிடங்களை நிரப்புவதில் முதல்வர் முக்கிய உத்தரவு போட்டிருக்கிறார். அதாவது அந்தந்த கிளைச் செயலாளர், சென்னை போன்ற மாநகரங்களாக இருந்தால் பகுதிச் செயலாளர், வார்டு செயலாளரின் உறவினருக்கு முன்னுரிமை அளிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதனால் யாரும் யாருக்கும் தலையாரி வேலைக்காக  பணம் கொடுக்கவோ பணம் வாங்கவோ வேண்டாம். பிறகு முதல்வரிடம் மாட்டிக்காதீங்க’ என்று கறாராக சொல்லியனுப்பியிருக்கிறார்கள் அமைச்சர்கள்.

ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வரும் முன்னரே வசூல் வேட்டையை நடத்தி முடித்துவிட்ட சிலர் இப்போது  பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கோரிக்கை வைத்த பள்ளி மாணவி : பரிசு கொடுத்த முதல்வர்!

” தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்”– மாண்டஸ் புயல் அலர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel