பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மீது இன்று (செப்டம்பர் 20) மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் 2வது நாள் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் முதல் மசோதாவாக 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த மசோதாவிற்கு நாரி சக்தி வந்தன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்த பிறகு அமல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் வேண்டும் என்று மக்களவை எம்.பி கனிமொழி இன்று நோட்டீஸ் கொடுத்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை வரை காத்திருக்காமல் இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் மக்களவையில் இன்று விவாதம் தொடங்கியது.
அப்போது பேசிய சோனியா காந்தி, “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் அரசியல் சட்டத் திருத்தம் என்பது எனது கணவர் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் 15 லட்சம் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ராஜீவ் காந்தியின் கனவு ஓரளவு மட்டுமே நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று தாக்கல் செய்த மசோதா நிறைவேறினால் அது முழுமையடையும். ஆனால் இப்போது பெண்கள் இட ஒதுக்கீட்டிற்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் பெண்கள் காத்திருப்பார்கள். இரண்டு ஆண்டுகள்? நான்கு ஆண்டுகள்? ஆறு ஆண்டுகள்? எட்டு ஆண்டுகள்? இது சரியானதா?
இந்த மசோதா உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், ஓபிசி பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
காவிரி நீர்: கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு!
’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்
திட்டம் கொண்டு வந்த மாதிரியும் ஆச்சு; வரவிடாம பண்ணினா மாதிரியும் ஆச்சு. மக்களவை, மேலவை இரண்டிலும் பாஸ் ஆனாலும் கவலை இல்ல; தள்ளிப் போட்டுடுவோம்; பாஸ் ஆகலைனாலும் இதையே சொல்லி ஓட்டு கேக்கவும் ஆரம்பிச்சிடுவோம். எப்படி நம்ம சின்ராசுவோட வேலை?