மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான வரையறைகளை முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தனது தந்தை தொல்காப்பியனின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து திருமாவளவன் இன்று(ஜூலை 15) மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் மண்டல வாரியாக அமைக்கப்பட வேண்டும்.
அதாவது மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டம், திருச்சி போன்ற மைய மாவட்டங்களில் இத்தகைய உலக தரம் வாய்ந்த நூலகங்கள் அமைவது, இளம் தலைமுறையினர் மேலும் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ள உதவும். மேலும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் மகளிர் உரிமைத்தொகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல அளவுகோளை கட்டுப்பாடுகளாக வைத்திருக்கிறார்கள்.
இந்த கட்டுப்பாடுகள், பெரும்பாலான பெண்களுக்கு உரிமைத் தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அந்த வரையறைகளை வகுத்திருக்கலாம். ஆனால் அந்த வரையறைகள் பரிசீலனைக்குரியது என்றே நான் கருதுகின்றேன்.
பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் அரசு கொண்டு வர வேண்டும். முதல்வரும் அதற்கு முன் வரவேண்டும். நான் முதல்வருக்கு இதை கோரிக்கையாக வைக்கிறேன்” என்று திருமாவளவன் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்!
’இங்க நான் தான் கிங்’: ஜெயிலர் படத்தின் இரண்டாம் ப்ரோமோ வெளியானது!