வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (பிப்ரவரி 4) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.
அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி வள்ளியம்மாள் ,ராஜாத்தி , நாகம்மாள் மற்றும் மல்லிகா ஆகிய நான்கு பெண்கள் பலியாகினர்
மேலும் மூன்று பெண்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பலியான பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று(பிப்ரவரி 4 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்டாவில் பயிர்கள் சேதம்: அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர்!
உயிரிழந்த 4 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக! – அன்புமணி