தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?

அரசியல்

பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள், விண்வெளிக்கு செல்கிறார்கள், ஐடி துறையில் அசத்துகிறார்கள், அனைத்து துறைகளிலும் ஆண்களைத் தாண்டி பெண்கள் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று பெண்களை மையப்படுத்திய சாதனைக் கதைகளை தினந்தோறும் பேசியும் கேட்டும் வருகிறோம். ஆனால் அரசியலில் பெண்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் ஆரம்ப காலம் முதல் பெரிதாக மாறவேயில்லை. எப்போதும் ஒன்றிரண்டு பெண் அரசியல் தலைவர்களை ரோல் மாடலாக கைகாட்டுவதோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு விடுகிறது.

பெண்களுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற அவைகளில் 33% இடஒதுக்கீடு என்ற மசோதா பாராளுமன்றத்தில் 2023 ஆகஸ்ட் மாதமே நிறைவேற்றப்பட்டு விட்டது. அதாவது மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.

இன்னும் நாடாளுமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அந்த இடத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சியாவது நடைபெற்றுள்ளதா என்றால் இல்லை. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களில் பெண்களின் இடம் கவலைக்குரியதாகவே உள்ளது.

நாட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்ட இடம் அரசியலில் தான் இருக்கிறது. இங்கு பெண்களுக்கான இடம் உறுதி செய்யப்படாமல் இருப்பது அனைத்து இடங்களிலும் பின்னடைவை உருவாக்கும் என்பதுதான் அடிப்படை சிக்கல்.

திமுக

தமிழ்நாட்டின் திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களில் 3 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள். தென்சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி மற்றும் தென்காசியில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரே திமுகவின் பெண் வேட்பாளர்கள். 33% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால் குறைந்தபட்சம் 7 பெண் வேட்பாளர்களாவது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சமூகநீதிக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு திமுகவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது, சமூக நீதியில் பெண்களுக்கான இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அதிமுக

தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஜெயலலிதா என்ற ஒரு பெண் தலைமையின் கீழ் இயங்கிய கட்சி. தமிழ்நாட்டிற்கு 5 முறை முதல்வராக ஒரு பெண் வருவதற்கான அடித்தளமாக இருந்த கட்சி. அந்த கட்சியின் தற்போதைய வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் தான் இடம்பெற்றிருக்கிறார். அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளில் திருநெல்வேலி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி மட்டும்தான் ஒரே ஒரு பெண் வேட்பாளர்.

பாஜக

அடுத்ததாக நாட்டை கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியான பாஜக. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் நிறைவேற்றியிருக்கிறோம், பாஜக தான் பெண்களுக்கான கட்சி, இதுவரை யாரும் செய்ய முடியாததை நாங்கள் செய்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்தது பாரதிய ஜனதா கட்சி. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து பாஜக 24 இடங்களில் போட்டியிடுகிறது. 33% பெண்களுக்கான இடம் என்றால் குறைந்தது 8 தொகுதிகளாவது பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் 3 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக இருக்கின்றனர். தென்சென்னையில் போட்டியிடும் தமிழிசை செளந்தர்ராஜன், விருதுநகரில் போட்டியிடும் நடிகை ராதிகா, சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் கார்த்தியாயினி ஆகிய 3 பேர் மட்டுமே பாஜகவின் பெண் வேட்பாளர்கள். அப்படியென்றால் 33% இடஒதுக்கீடு பெண்களுக்கு நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று பெருமையோடு தம்பட்டம் அடிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

காங்கிரஸ்

இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட கட்சி காங்கிரஸ். அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்சம் மூன்று பெண்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் கரூர் தொகுதியில் களம் காணும் ஜோதிமணி மற்றும் மயிலாடுதுறையில் களம் காணும் சுதா ஆகிய இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாடு காங்கிரசின் பெண் வேட்பாளர்கள்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் மட்டுமே பெருமளவிலான பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்த வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 13 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கடந்த தேர்தல்களைப் போலவே பெண்களுக்கு சரிசமமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுக்கிறோம் என்பதை வாய்மொழியாக அல்லாமல் செயல்வழியில் அனைத்து கட்சிகளும் செய்து காட்ட வேண்டும் என்பதே பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில் பெண்களைக் குறித்து பேசும்போது ரோல்மாடலாக சிலரைக் குறிவைத்து அவர்களை மட்டும் கொண்டாடுவதை விட்டுவிட்டு, பெண்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை அரசியல் அதிகாரத்தில் வழங்கிட வேண்டும். அதுவே பெண்கள் முன்னேற்றத்தின் முக்கிய மைல் கல்லாக அமையும்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? – டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நாம் தமிழர் கட்சி ‘மைக்’ சின்னத்தில் போட்டி: சீமான் அறிவிப்பு!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்காதது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *