அமைச்சர் பொன்முடி பேசிய மகளிரின் இலவச பயணம் குறித்த கருத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகர் தெற்குப் பகுதி திமுக சார்பில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி முப்பெரும் விழா விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “இப்போது பெண்கள் எல்லாம் எப்படி பயணம் செய்கிறீர்கள்.
கோயம்பேடு போகவேண்டும் என்றால் ஓசி பேருந்தில்தான் செல்கிறீர்கள்” எனப் பேசியிருந்தார். சர்ச்சையை உண்டாக்கிய அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தம்முடைய ட்விட்டர் பதிவில், “மக்களுக்கான சலுகைகளை நீங்கள் அவர்களின் வரிப்பணத்திலிருந்துதான் தருகிறீர்கள்.
பெருத்து வழியும் கோபாலபுரத்து கஜானாவிலிருந்தல்ல. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வக்கில்லாத அறிவாலயம், நம்பி வாக்களித்த பாமர மக்களை துச்சமாக மதித்து ஏளனம் பேசுவது கண்டிக்கத்தக்கது” எனப் பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று (செப்டம்பர் 26) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா? மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது.
பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?” எனப் பதிவிட்டுள்ளார்.

பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே குற்றம்சாட்டப்பட்டது.
இதையொட்டி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், அறிக்கை ஒன்று கடந்த ஆண்டு (2021) ஜூலை 25ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், “நடத்துனர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.
வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கிவிட வேண்டும்” உள்ளிட்ட அறுவுறுத்தல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், மூத்த அமைச்சர் ஒருவரே பெண்களின் இலவச பயணம் குறித்து பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
திட்டங்களை பற்றி பேசுவோம் : திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்! குமரி: சுரேஷ்
ராஜனை முடக்கிய ஸ்டாலின்- தனிக்காட்டு ராஜாவான மனோ தங்கராஜ்