ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நாடு தழுவிய பிரதிநிதிகள் சபை கூட்டம் இன்று (மார்ச் 12) ஹரியானா மாநிலம் பானிபட்டில் தொடங்கியிருக்கிறது. 12, 13, 14 தேதிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.
அகில பாரத பிரதிநிதிகள் சபா எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நாடு தழுவிய பிரதிநிதிகள் கூட்டம் வருடா வருடம் மூன்று நாட்கள் மார்ச் மாதத்தில் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் முந்தைய ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது பற்றிய ஆய்வும், அடுத்து வரும் ஆண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்ற செயல் திட்டமும் வகுக்கப்படும். அந்த வகையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள சமல்காவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உட்பட 1400க்கும் மேற்பட்ட சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டாவும் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியை இன்று காலை மோகன் பகவத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தல், மக்களவை தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், முஸ்லிம் சமூகத்திற்கு உதவுவது குறித்தும் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படவுள்ளது. மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களின் பங்கு அதிகரிப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பெண்களை ‘ஷாகா’க்களில் இணைப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும் ஒரு வகையில் காரணம் என்பது முக்கியமானது.
சில வருடங்களுக்கு முன்பு ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் பெண்கள் கூட்டத்தில் பேசும்போது, “ஆர்எஸ்எஸ் ஷாகாவில் நீங்கள் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே பெண்களைப் பார்க்க முடியாது. அவர்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள். பாலின சமத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். ஏற்காது. அதனால்தான் ஷாகாக்களில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ்.சுக்குள் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியது. ராகுல் காந்திக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ்சின் இப்போதைய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா, “ராகுல் காந்தியின் கருத்து எப்படி இருக்கிறது என்றால் ஆண்களுக்கான ஹாக்கி போட்டிக்கு சென்றுவிட்டு ஏன் இங்கே பெண்கள் யாரும் விளையாட வில்லை என்று கேட்பது மாதிரி இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுபவை. அங்கே சொல்லும் விஷயங்களை அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துச் செல்கின்றனர்” என்று கூறினார். அந்த மன்மோகன் வைத்யாதான் இப்போது, ‘ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் முக்கியத்துவம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
அப்போதே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், “ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து அமைப்புகளிலும் பெண்கள் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஆனால் ஷாகாக்கள் அதிகாலை நேரத்தில் நடப்பதால் பெண்களின் நேரம், அவர்களுக்கான உடல் ரீதியான விஷயங்களால் ஷாகாக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பெண்களுக்கான ராஷ்ட்ர சேவிகா சமிதி தினமும் நண்பகல் மற்றும் சில இடங்களில் வாரத்திற்கு மூன்று முறை அதன் ஷாகாக்களை நடத்துகிறது.
நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பங்களில் உள்ள பெண்களுடன் நாங்கள் வேலை செய்கிறோம், அவர்கள் அவசரமாக வேலைக்குச் செல்வதாலும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருப்பதாலும் அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஷாகாவுக்கு வரச் சொல்வது நியாயமற்றது” என்று பதிலளித்தனர். புனே போன்ற நகரங்களில் ஆர்எஸ்எஸ் தனது “ஆண்களுக்கு மட்டும்” என்ற அறிவிப்பை அகற்றியதும் இங்கே நினைவுகூரத் தக்கது.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் இன்னும் பெண் நிர்வாகிகள் இல்லை என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். உயர் முடிவெடுக்கும் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் பிரதிநிதிகள் சபாவில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மேடையில் பெண் நிர்வாகிகளையே பார்க்க முடியவில்லை.
2022 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ், விஜயதசமி கொண்டாட்டத்தில் விழா மேடையில் ஒரு பெண் ஏறினார். எல்லாருக்கும் ஆச்சரியம். ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் முதல்முறையாக மேடையில் ஒரு பெண் ஏறியிருந்தார்.
ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அல்ல. மலையேற்றத்தில் சாதனை படைத்த சந்தோஷ் யாதவ் என்ற பெண்மணி சிறப்பு விருந்தினராக அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருந்தினர் என்ற வகையில் அவர் மேடையேறினார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்று தொடங்கி மூன்று நாட்களில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். அமர்வில் ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது மேடையில் நூறாம் ஆண்டிலாவது நிர்வாகிகளாக பெண்களை அமர்த்தி அழகு பார்க்குமா?
–ஆரா