ஆம்ஸ்ட்ராங் கொலையில் பெண் தாதாக்கள்… யார் இந்த மலர்கொடி, அஞ்சலை?

அரசியல்

தமிழ்நாடு  மட்டுமல்ல, தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் புதிய புதிய அதிரடி கேரக்டர்களின் தொடர்பு  பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் இப்போது இந்த விவகாரத்தில் பெண் தாதாக்களின் சம்பந்தம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் போலீஸ் வட்டாரத்தில் இருந்து வருகின்றன.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் பெருமாள் தெருவில், தான் கட்டி வரும் வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீஸார், கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அவரின் உறவினர் வழக்கறிஞர் அருள், ரவுடிகள் திருவேங்கடம், திருமலை, கூலிப்படையைச் சேர்ந்த செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், விஜய், சிவசக்தி, ராமு என்கிற வினோத் என 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை 5 நாள் காவலில் எடுத்த போலீசார் அவர்களிடம் தனித்தனியாகவும், மொத்தமாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற ரவுடி திருவேங்கடம், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

எனினும் கொலை குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, திருவேங்கடம் மட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, பாஜகவை சேர்ந்த அஞ்சலை ஆகிய பெண் தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

தோட்டம் சேகர், மலர்கொடி

யார் இந்த மலர் கொடி?

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அருளின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளை பரிசோதித்ததில், பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியராக உள்ள மலர்கொடி மூலம் கைது செய்யப்பட்ட கூலிப்படைக்கு 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து மலர்கொடி, அவருக்கு உதவிய ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் திமுக இலக்கிய அணி பிரமுகரின் உறவினரான சதீஷ் ஆகிய 3 பேரையும் கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மலர்க்கொடியின் கடந்த கால வாழ்க்கை குறித்து வெளிவரும் தகவல்கள், பல பழிக்குபழி வாங்கும் சினிமா கதைகளை தாண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வட்டாரத்தில் கேட்டபோது,  “சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் தாதாவாக அறியப்பட்டவர் தோட்டம் சேகர். அவர் அதிமுகவின்  மேடைப் பேச்சாளராகவும் இருந்தார். இந்த தோட்டம் சேகரின் மனைவிதான் மலர்கொடி. இவரது மகன்கள் அழகுராஜா, பாலாஜி.

கடந்த 2001-ம் ஆண்டு தோட்டம் சேகர்,  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது மலர்கொடியின் மகன்கள் அழகுராஜா, பாலாஜி இருவரும் 5 வயதைக் கூட தாண்டாத பிஞ்சு குழந்தைகளாக இருந்தனர்.

மயிலை சிவகுமார்(இடது), அழகு ராஜா (வலது)

கணவரை பறிகொடுத்த மலர்கொடியோ தோட்டம் சேகரின் படுகொலைக்கு பழிதீர்க்க வேண்டும் என சபதம் எடுத்துக்கொண்டார். அதன்படி கணவரை கொன்றதாக கூறப்படும் மயிலை சிவக்குமாரை பழிக்கு பழியாக கொல்ல வேண்டும் என்பதை சிறுவயது முதலே தனது இரு மகன்களுக்கும் கூறி வெறியூட்டி வளர்த்து வந்தார்.

இதற்கிடையே மலர்க்கொடியும் சட்டம் படித்து வழக்கறிஞராக மாற, இரு மகன்களும் இளைஞர்களாக உருவெடுத்து மயிலை சிவக்குமாருக்கு ஸ்கெட்ச் போட்டு வந்தனர்.  இதனையறிந்து கொண்ட சிவகுமார், தனது கூலிப்படை மூலம் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக  மலர்க்கொடி, அழகுராஜ் சென்று கொண்டிருந்த  ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவர்களை கொல்ல முயற்சித்தார். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார் மயிலை சிவக்குமார்.

பெயிலில் வெளியே வந்த சிவக்குமார் கடந்த 2021 இல் சென்னை அசோக் நகர் அருகே கூலிப்படையால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் அழகுராஜா.  ’நான் குழந்தையாக இருந்த போது என்  தந்தை தோட்டம் சேகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைக்கு காரணமானவர் என்பதாலேயே சிவகுமாரை வெட்டிக் கொன்றோம்’  என அழகுராஜா அதிர்ச்சி  வாக்கு மூலம் அளித்தார்.

அதாவது கணவர் படுகொலைக்காக 20 ஆண்டுகள் காத்திருந்து மகன் அழகுராஜா மூலம் பழி தீர்த்தவர்தான் தற்போது சிக்கியிருக்கும்  ‘சி’ பிரிவு தாதாவான மலர்க்கொடி.

இந்த நிலையில் தற்போது வழக்கறிஞர் அருள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கூலிப்படை கும்பலுக்கு இடையே பணபரிமாற்றம் செய்வது என மலர்கொடி ஈடுபட்டது தெரிய வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தனது கணவரை கொன்ற மயிலை சிவக்குமாருக்கு ஆதரவாக இருந்த காரணத்தினாலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மலர்கொடியும் சம்பந்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் தோழி பாஜக நிர்வாகி 'கஞ்சா' அஞ்சலைக்கு முக்கிய தொடர்பு? | CBCID Probes BJP leader Anjalai links with Tamil Nadu BSP Chief ...

யார் இந்த அஞ்சலை?

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவராக செயல்பட்டு வந்த மற்றொரு பெண் தாதா அஞ்சலைக்கும் தொடர்பு இருக்கிறது என்றும்,  அவர் தேடப்பட்டு வருகிறார் என்றும் போலீசார் அறிவித்தனர். இந்த அஞ்சலை பாஜக மாநிலத் தலைவராக எல். முருகன் இருந்தபோது பாஜகவில் இணைந்தார். மகளிரணி நிர்வாகியாக செயல்பட்டு பின் அடுத்த பதவிக்கு வந்தார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை.  இவர் முன்பு வடசென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர். இவர் மீது கொலை, கந்துவட்டி, கஞ்சா விற்பனை என 10 வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ’பி’ பிரிவு ரவுடிப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவர் கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழி.

2023 ஆம்ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் பழித்தீர்க்கும் கும்பலில் அஞ்சலையும் இணைந்துள்ளார். அவர் தான் இந்த கொலை கும்பலுக்கு தேவையான அனைத்து பண உதவிகளையும் லட்சக்கணக்கில் செய்து வந்துள்ளதாக போலீசார் தரப்பில் சொல்கிறார்கள்.

இதனையடுத்து பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவராக  இருந்த அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர்கொடி, அஞ்சலை என இரு பெண் தாதாக்களின் தொடர்பு குறித்த விசாரணை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் எங்கெங்கு மழை?

பாஸ்டேக் ஒட்டவில்லையெனில்… வாகன உரிமையாளர்களின் கவனத்துக்கு!

+1
0
+1
2
+1
0
+1
6
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *