அரசுப் பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று சொல்லப்படும் தகவலில் உண்மையில்லை எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு (2021) முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24ம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ”இப்போது பெண்கள் எல்லாம் பயணம் செய்கிறீர்கள். கோயம்பேடு போக வேண்டுமென்றால், ஓசி பேருந்தில்தானே செல்கிறீர்கள்” எனப் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு, சர்ச்சையானதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, ”நான் விளையாட்டாகப் பேசியதை பெரிதாக்குகிறார்கள்” என விளக்கமளித்திருந்தார். இதற்கிடையே, கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ”நான் ஓசியில் பயணிக்க மாட்டேன்; காசு வாங்கிக் கொள்” என்று நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ, அதிமுக ஐ.டி. லிங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் அந்த மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துநரிடம் பிரச்சினை செய்யவைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக திமுக போலீசில் புகார் அளித்தது. இதுதொடர்பாக துளசியம்மாள், பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த காவல் துறை, துளசியம்மாளை வெறும் சாட்சியாக மட்டுமே சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் பெண்கள் சிலர் இலவசமாக பயணிக்க விரும்பாமல் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கி பயணித்தனர். இந்த சம்பவங்களின் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பை வாய்மொழியாக வெளியிட்டுள்ளதாக இன்று (அக்டோபர் 4) தகவல் வெளியானது.
அதில், அரசுப் பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
”இது உறுதியான தகவலா” என மின்னம்பலத்தின் சார்பில், இன்று (அக்டோபர் 4) தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது, “அந்தச் செய்தியில் உண்மையில்லை” என உறுதியாக தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ், அப்துல் ராஃபிக்