“மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தால் அக்குடும்பங்களுக்கு 8-12 சதவிகித சேமிப்பு கிடைக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள திட்டக்குழு அலுவலகத்தில் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் 3ஆவது கூட்டம் இன்று (ஆகஸ்ட் 12) நடந்தது. இதில் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குழுவின் தலைவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நாம் செய்துள்ள சீராய்வுகள் அவற்றை மென்மேலும் சிறப்புறச் செயல்படுத்த ஒரு முக்கியத் திறவுகோலாக அமையும். குறிப்பாக, மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இது, திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல அடையாளமும்கூட.
மேலும், தமிழ்நாடு செயல்படுத்தி வரும் மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தால் அக்குடும்பங்களுக்கு 8-12 சதவிகித சேமிப்பு கிடைக்கிறது. ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் இன்னும் மேன்மேலும் பயனடைய வேண்டும். இதன்மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் அடையாளம் காண வேண்டும்.
மகளிர்க்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், சமூக பொருளாதார அளவுகளில் ஏற்படுத்தி வரும் நேர்மறையான தாக்கங்கள் குறித்த கட்டுரைகள் பல்வேறு தளங்களில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் மட்டுமல்ல, திராவிட மாடல் அரசின் முகமாக இருக்கும் திட்டங்கள் குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கட்டுரைகள் வெளியிடுவதன் மூலமாக நாம் பரப்புரை செய்தாக வேண்டும்.
அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸ் ஆகிய இரண்டையும் அலசி ஆராய்ந்து, நீங்கள்தான் அரசுக்குச் சொல்ல வேண்டும். திட்டமிடும் குழுவாக மட்டுமல்ல, கண்காணிக்கும் குழுவாகவும் நீங்கள் இருக்க வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்