ஏதோ மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு,க. ஸ்டாலின், “நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசு தான் என்பது கூட தெரியாத ஒருவர் தமிழகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது வேதனை தருகிறது” என எடப்பாடியை தாக்கினார்.
மாநில அரசு நடத்திய விழா தான்!
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”கலைஞர் நாணய வெளியீட்டு விழா மாநில அரசால் நடத்தப்படுகின்ற விழா அல்ல, மத்திய அரசால் நடத்தப்படுகின்ற விழா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் எனக்கு வந்த அந்த அழைப்பிதழில் மாநில அரசினுடைய எம்பலம் தான் பொறிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமை நிலையச் செயலாளர் தான் எனக்கு அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அவருடைய பெயர் தான் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது.
ஆகவே அது மாநில அரசு நடத்திய விழா. மத்திய அரசு நடத்தவில்லை. இது கூட தெரியாமல் இருக்கின்ற ஒரு முதலமைச்சர் என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
எம்ஜிஆரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார்!
அது மட்டுமல்ல இதைச் சொன்ன உடனே பாஜகவை சேர்ந்த மாநிலத் தலைவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து என்னை பற்றி வசைபாடி இருக்கின்றார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வந்த பொழுது சிறப்புச் செய்யும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்பொழுது அதிமுகவின் தொண்டன் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற முறையிலும் நானே வெளியிட்டேன். அதைப்பற்றி சிறுமைப்படுத்தி பேசி இருக்கின்றார் பாஜக தலைவர்.
ஏதோ மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். அவர் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி அமைத்துள்ளார். எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார்.
பாஜகவின் இரட்டை வேடம்!
பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்த பொழுது அது நிறைவேற்றுவதற்கு அதிமுக தேவை. அப்பொழுது அதிமுக நன்றாக இருந்தது. இப்பொழுது உறவையும் முறிக்கும் பொழுது அதிமுக கெட்டதாக தெரிகிறது. இதுதான் பாஜகவினுடைய இரட்டை வேடம்.
தமிழகத்திற்காக ஒரு திட்டத்தையும் கொண்டுவரலை!
எனது தலைமையில் அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பாகவே தமிழக அரசு கடனில் இருந்தது. என்றாலும் கொரோனா காலத்தில் கூட பல்வேறுத்திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் மத்திய பாஜக அரசு 2014ல் ஆட்சிக்கு வரும்போது 55 லட்சத்தில் இருந்து கடன் தற்போது 168 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு தள்ளியது. இது பத்தாண்டு காலத்தில் பாஜக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை தமிழகத்திற்காக ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா